நேபாள போராட்டங்கள்: சுற்றுக்காவலில் அமர்த்தப்பட்டுள்ள ராணுவம், இறப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு

நோப்பாளத்தில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த ராணுவ வீரர்கள் சுற்றுக்காவலில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக நேப்பாள ஊடகம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை (செப்டம்பர் 10) நிலவரப்படி ஏறத்தாழ 31 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் நேப்பாளத்தின் சுகாதார, மக்கள்தொகை அமைச்சு கூறியதாக இந்தியாவின் ‘த இந்து’ நாளிதழ் தெரிவித்தது.
நேப்பாளத்தின் பிரதமராக இருந்த கே.பி. ஷர்மா ஒலியின் அலுவலகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்து அவரது வீட்டுக்கும் மற்ற அரசாங்கக் கட்டடங்களுக்கும் தீவைத்தனர்.இதை அடுத்து, ஒலி பதவி விலகினார்.
அவரது பதவி விலகலை அடுத்து, செவ்வாய்க்கிழமையிலிருந்து (செப்டம்பர் 9) ராணுவம் சுற்றுக்காவலில் ஈடுபட்டு வருகிறது.
நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள விமான நிலையம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.இதற்கிடையே, நேப்பாளத்தில் அதிகரித்து வரும் அரசியல் நிலையற்றத்தன்மை இந்தியாவுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
“இந்தியாவுக்கும் நேப்பாளத்துக்கும் இடையிலான நீண்டகாலப் பொருளியல், பாதுகாப்பு, கலாசார உறவு தொடர்கிறது. இருநாடுகளுக்கும் இடையிலான திறந்த எல்லைப் பகுதி காரணமாக நேப்பாளத்தில் அரசியல் நிலையற்றத்தன்மை ஏற்பட்டால் அது இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை நேரடியாகப் பாதிக்கும்,” என்று புளூம்பர்க்கின் தெற்காசியப் புவிசார் பொருளியல் பகுப்பாய்வாளர் செட்னா குமார் பதிவிட்டார்.