கத்தார் மீது இஸ்ரேலின் திடீர் தாக்குதல் – குவியும் கண்டனம்

கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
காசாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் அமைப்பினரை கூண்டோடு அழிக்கும் விதமாக, இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸின் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை கத்தார் அதிகாரிகளும் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் கத்தார் பாதுகாப்பு படை வீரர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், தங்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் நேற்று முன்தினம் ஜெருசலேமில் 6 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகே, அமெரிக்கா தங்களை எச்சரித்ததாக கத்தாரின் பிரதமர் ஷெய்க் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி கூறினார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே முக்கிய மத்தியஸ்தராக செயல்படும் கத்தார் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலால், மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனிடையே, சர்வதேச விதிகளை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது ஒரு நல்ல சூழ்நிலை அல்ல என்றும் அவர் கூறினார்.