சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்க நேபாள பிரதமர் மறுப்பு

இமயமலை அடிவார நாடான நேபாளத்தை ஆண்டுவரும் கே.பி.சர்மா ஒலி அரசு, நாட்டில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தது. இதனால் சமூக வலைத்தளங்களை கடந்த 4ந் தேதி நள்ளிரவு முதல் நேபாள அரசு தடை செய்தது.
நேபாள அரசு சமூக வலைத்தளங்களுக்கு எதிரானது அல்ல எனக்கூறிய பிரதமர் கே.பி.ஒலி, அதேநேரம் நேபாள அரசின் சட்டத்துக்கு உட்படாமல் சமூக ஊடகங்கள் நாட்டில் வணிகம் செய்வதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்து இருந்தார்.
இது வலைத்தளவாசிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், நேபாள அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க இளைஞர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைய தலைமுறையினர் திட்டமிட்டனர்.
புதிய தலைமுறையை குறிக்கும் ‘ஜென் சி’ என்ற பெயரிலான பதாகையை ஏந்திக்கொண்டு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
நிலைமை கைமீறி போகவே போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, நேபாள அமைச்சரவைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நேபாள சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகையில், சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த பிரதமர் கேபி ஷர்மா ஒலி, அரசின் முடிவு சரியானது. எனவே அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை”என்று குறிப்பிட்டுள்ளார்.