அனுடின் சார்ன்விரகுலை பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ள தாய்லாந்து நாடாளுமன்றம்

தாய்லாந்தின் புதிய பிரதமராக பும்ஜாய்தாய் கட்சியின் தலைவரான அனுட்டின் சார்ன்விராக்குல்(58), தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆளும் பியூ தாய் கட்சியின் பிரதமர் வேட்பாளர் சய்க்காசம் நித்திசிரி தோல்வி அடைந்தார்.
நாட்டின் செல்வாக்குமிக்க பியூ தாய் கட்சியின் பிரதமர் பொறுப்பிலிருந்து பேடோங்டார்ன் ஷினவத்ர அகற்றப்பட்டதைத் தொடர்ந்து பிரதமருக்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு இடையே ஒழுங்கை நிலைநாட்டி நான்கு மாதங்களில் தேர்தல் நடத்தப்போவதாக அனுட்டின் உறுதியளித்திருந்ததால் அவருக்கு ஆதரவு பெருகியது.
எதிர்க்கட்சியான மக்கள் கட்சியும் ஆதரவு அளித்தது. இதனால் பிரதமராகத் தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான வாக்குகளை அவர் எளிதாகப் பெற்றார்.
அனுட்டினுக்கு மொத்தம் 311 வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பியூ தாய் கட்சியின் சய்க்காசத்திற்கு 152 வாக்குகள் கிடைத்தன. பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
வாக்கெடுப்புக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அனுட்டின், “வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு இடையே உள்ள ஒரே பொதுவான எதிரி, நாட்டின் எதிரியாகத்தான் இருக்கும்,” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக பியூதாய் கட்சியை பின்னணியிலிருந்து இயக்கிய பெரும் செல்வந்தரான தக்சின் ஷினவத்ர நாட்டைவிட்டு அதிரடியாக வெளியேறியுள்ளார்.செப்டம்பர் 4 ஆம் தேதி இரவு தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தில் அவர் துபாய்க்குப் புறப்பட்டார்.
அடுத்த வாரம் அவர்மீதான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படவிருக்கிறது. அதில் அவருக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தச் சூழ்நிலையில் தக்சின் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அவரது குடும்பத்தின் பியூதாய் கட்சியும் ஆட்சியை இழந்துள்ளது.