இலங்கை கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் அடையாளம் காணப்பட்டனவா?

துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் எலும்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மூடப்பட்ட, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த எவரும் முன்வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இலங்கையின் ஆறாவது பெரிய மனித புதைகுழியான கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
மீட்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண்பதற்கான பத்திரிகை விளம்பரத்தை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) வெளியிட்டு மூன்று வாரங்கள் ஆவதாக, வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரண வி. எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.
எனினும், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த எவரும் முன்வந்ததாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என சட்டத்தரணி மேலும் தெரிவிக்கின்றார்.
“நபர்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பத்திரிகை விளம்பரம் வெளியிடப்பட்டு மூன்று வாரங்கள் ஆகின்றன. இதற்கு கால அவகாசம் போதுமானதல்ல என்பதால் OMP அலுவலகம் இன்று நீதிமன்றத்தில் தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இது தொடர்பாக எங்களுக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.”
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய தகவல்கள் இருந்தால், அச்சமின்றி முன்வருமாறு அழைப்பு விடுத்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், அவ்வாறு முன்வருபவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் வலியுறுத்தினார்.
ஓகஸ்ட் 3ஆம் திகதி OMP அலுவலகம் பத்திரிகையில் வெளியிட்ட விளம்பரம் சரியான முறையில் மக்களைச் சென்றடைந்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா? என, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், பத்திரிகை விளம்பரம் உடனடியாக மக்களைச் சென்றடையவில்லை என சுட்டிக்காட்டினார்.
“இது மக்களைச் சென்றடைந்ததா என்பதை மக்களிடம் கேட்டுதான் அறிய முடியும். ஏனெனில் பத்திரிகை விளம்பரங்கள் உடனடியாக மக்களைச் சென்றடைவதில்லை.”
தாம் பட்டியலிட்டுள்ள பிற பொருட்கள் பற்றிய தகவல் அறிந்தவர்கள், 2025 செப்டம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாக தமது பிரதான காரியாலயம் அல்லது பிராந்திய காரியாலயங்களுக்கு வருமாறு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஓகஸ்ட் 3, 2025 அன்று வெளியிட்ட பத்திரிகை விளம்பரத்தில் மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 30 மனித எலும்புகளுடன் தொடர்புடைய பிற பொருட்களின் பட்டியல் விளம்பரத்தில் வெளியிடப்பட்டது.
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 90களின் நடுப்பகுதியில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையது என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் 2024 மார்ச் மாதம் கையளித்த இடைக்கால அறிக்கையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டிருந்தார்.
தடவியல் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழு, மார்ச் 22, 2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் 1994 மற்றும் 1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை எனவும், சடலங்கள் முறையாக புதைக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் முன்னர் துப்பாக்கிச் சண்டையை எதிர்கொண்டிருந்ததாகவும் அறிக்கையின் அனுமானம் வெளியிடப்பட்டிருந்தது.
ஜூலை 15, 2024 அன்று அகழ்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 52 உடல்களில் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவவின் தனது அறிக்கையில் அனுமானம் வெளியிட்டிருந்தார்.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்திலிருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில், நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய்களை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைத் துண்டுகள் வெளிப்பட்டன.