போட்டோ, வீடியோ, லைவ், கால், ஏ.ஐ வசதிகளுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கண்ணாடி

ரிலையன்ஸ் நிறுவனம் தனது 48-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் ஜியோஃப்ரேம்ஸ் (JioFrames) என்ற புதிய ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய அணியக்கூடிய சாதனத்தை (wearable device) அறிமுகப்படுத்தி உள்ளது. இது மெட்டாவின் ரே-பான் ஸ்மார்ட் கிளாஸ் (Ray-Ban smartglasses) சாதனத்துக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்டா ரே-பான் ஸ்மார்ட் கிளாஸ், ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலியன் போன்ற மொழிகளை மட்டுமே ஆதரிக்கும் நிலையில், இந்த ஜியோஃப்ரேம்ஸ் கருவியில் உள்ள ஏஐ குரல் உதவியாளர், பல இந்திய மொழிகளிலும் இயங்கும் திறன் கொண்டது. இதனால் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியிலேயே ஏஐ உதவியாளருடன் பேச முடியும்.
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி இதுகுறித்துப் பேசுகையில், “இந்திய மக்களின் வாழ்க்கை முறை, வேலை மற்றும் பொழுதுபோக்குக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட, கைகளில்லாமல் இயங்கும் ஏஐ துணைவன். ஜியோஃப்ரேம்ஸ் மூலம், உங்கள் உலகத்தை நீங்கள் இதுவரை இல்லாத அளவுக்குப் பதிவு செய்ய முடியும். ஹெச்டி புகைப்படங்கள், வீடியோக்களை எடுப்பது அல்லது நேரலை செல்வது என ஒவ்வொரு நினைவும் உடனுக்குடன் ஜியோ ஏஐ கிளவுடில் சேமிக்கப்படும்” என்று கூறினார்.
கடந்தாண்டு இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் ஜியோஃப்ரேம்ஸ் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், அப்போது அதன் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் எதுவும் பகிரப்படவில்லை. தற்போது இந்த ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அம்சங்கள்:
ரே-பான் மெட்டா சாதனத்தைப் போலவே, ஜியோஃப்ரேம்ஸ் கருவியிலும் உள்ளமைக்கப்பட்ட கேமரா உள்ளது. இதன் மூலம் பயனர்கள் புகைப் படங்கள் எடுக்கலாம், வீடியோக்களைப் பதிவு செய்யலாம், மேலும் சமூக வலைத்தளங்களில் நேரலையும் செல்ல முடியும். இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி எடுக்கப்படும் அனைத்துப் படங்களும் தானாகவே ஜியோ கிளவுடில் சேமிக்கப்படும். இதுதவிர, இதில் உள்ள ஓபன்-இயர் ஸ்பீக்கர் மூலம் அழைப்புகளை ஏற்கலாம், பயணத்தின்போது இசையோ (அ) பாட்காஸ்ட்களோ கேட்கலாம், மேலும் கூட்டங்களிலும் கலந்துகொள்ளலாம்.
எனினும், ஜியோஃப்ரேம்ஸ் எப்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கிடைக்கும், அதன் விலை என்ன, மற்றும் இந்தச் சாதனத்தை இயக்கும் ஏஐ மாடல் எது என்பது குறித்த எந்தத் தகவலையும் ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை.
ரிலையன்ஸ்-மெட்டா கூட்டு முயற்சி
இந்த ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் ரிலையன்ஸ், மெட்டா நிறுவனத்துடன் இணைந்து புதிய ஏஐ கூட்டு முயற்சி பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டது. இந்த நிகழ்வில் மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் காணொலி மூலம் கலந்துகொண்டு பேசுகையில், “மெட்டாவில், நாங்கள் தனிநபர் அதீத நுண்ணறிவை (personal superintelligence) அனைவருக்கும் கொண்டு சேர்க்க விரும்புகிறோம். இந்தத் தொழில்நுட்பம் மக்களின் தனிப்பட்ட திறமைகளை மேம்படுத்தி, உலகை நல்ல திசையில் மாற்றியமைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. அதனால்தான், இந்தக் கூட்டு முயற்சியில் நான் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன். இது அனைவரும் ஏஐ-யை அணுகுவதற்கும், இறுதியில் அதீத நுண்ணறிவைப் பெறுவதற்கும் ஒரு முக்கியப் படி” என்று தெரிவித்தார்.
மெட்டாவும் ரிலையன்ஸும் இணைந்து, இந்தியத் தொழில் நிறுவனங்கள் தங்கள் பணிகளைச் செம்மைப்படுத்த உதவும் வகையில், ஓப்பன் சோர்ஸ் ஏஐ மாடல்களை (open-source AI models) வழங்கப் போவதாக சக்கர்பெர்க் மேலும் கூறினார். “லாமா (Llama) மூலம், ஏஐ எப்படி மனிதத் திறனைப் பெருக்கி, உற்பத்தித்திறனை அதிகரித்து, படைப்பாற்றலை ஊக்குவித்து, புதுமைகளை விரைவுபடுத்துகிறது என்பதை நாம் கண்டிருக்கிறோம். இப்போது ரிலையன்ஸின் அணுகுமுறையும் வீச்சும் மூலம் இதை இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்ல முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.