ஆசிய கோப்பை தொடரில் அசத்த போகும் வீரர் தொடர்பில் சேவக் ஆருடம்

ஆசிய கோப்பை தொடரில் பும்ரா, அபிஷேக் சர்மா, வருண் சக்ரவர்த்தி அசத்துவர். ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வெற்றி நாயகர்களாக ஜொலிப்பர்,” என சேவக் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை ‘டி-20’ தொடர் (செப். 9-28) நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. செப். 14ல் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோத உள்ளன.
3 முக்கிய வீரர்கள்: இத்தொடரில் ‘வேகப்புயல்’ பும்ரா பங்கேற்பது இந்திய அணிக்கு சாதகம். கடந்த ஆண்டு ‘டி-20’ உலக கோப்பை தொடரில் 15 விக்கெட் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். 70 ‘டி-20’ போட்டிகளில் 89 விக்கெட் சாய்த்துள்ளார்.
அடுத்து, இடது கை பேட்டர் அபிஷேக் சர்மா மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சர்வதேச ‘டி-20’ ரேங்கிங்கில் ‘நம்பர்-1’ பேட்டராக உள்ளார். துவக்கத்தில் அதிரடியாக ஆடக்கூடியவர். 17 ‘டி-20’ போட்டிகளில் 2 சதம், 2 அரைசதம் உட்பட 535 ரன் (ஸ்டிரைக் ரேட் 193.84) எடுத்துள்ளார். இந்தியா சார்பில் ‘டி-20’ போட்டியில் அதிக ரன் (135, எதிர், இங்கிலாந்து, 2025, மும்பை) எடுத்து சாதனை படைத்துள்ளார்.
மணிக்கட்டு ‘ஸ்பின்னரான’ தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி, 18 ‘டி-20’ போட்டிகளில் 33 விக்கெட் கைப்பற்றியுள்ளார். தனது ‘சுழல்’ ஜாலத்தால் எதிரணி பேட்டர்களை திணறடிக்க காத்திருக்கிறார்.
இந்தியாவுக்கு கோப்பை: இது குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்டர் சேவக் கூறுகையில்,”இந்தியா தான் ‘டி-20’ உலக சாம்பியன். சமீபத்தில் தான் ‘டி-20’ உலக கோப்பை வென்றோம். ஆசிய கோப்பையையும் வெல்வோம். இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியில் மட்டும் நெருக்கடி அதிகம் இருக்கும். தற்போது இந்தியா சிறந்த அணியாக இருப்பதால், பிரச்னை இல்லை. திறமையான இளம் வீரர்கள் உள்ளனர்.
இத்தொடர், 2026ல் நடக்க உள்ள ‘டி-20’ உலக கோப்பையில் சாதிக்க சிறந்த அடித்தளமாக அமையும். அணியின் பலத்தை பரிசோதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆசிய கோப்பையில் பும்ரா, அபிஷேக் சர்மா, வருண் சக்ரவர்த்தி மிரட்டுவர். இவர்களால், தனிநபராக அசத்தி வெற்றி தேடித் தர முடியும். ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் பெற்றவர்கள். சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபியில் ‘சுழல்’ மாயாவி வருண் சக்ரவர்த்தி கைகொடுத்தார். சூர்யகுமார் தலைமை, அணிக்கு பெரும் பலம்,”என்றார்.
இந்திய பயிற்சி எப்போது
ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய வீரர்கள் துபாய் புறப்படுகின்றனர். இது பற்றி பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,”முன்பு அனைவரும் மும்பையில் இருந்து ஒன்றாக புறப்படுவர். இம்முறை போக்குவரத்து பிரச்னையை தவிர்க்க, வீரர்கள் வசிக்கும் நகரங்களில் இருந்து தனித்தனியாக துபாய் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலர் மும்பையில் இருந்து செல்லலாம். அனைவரும் செப்.4ல் துபாய் வந்து சேருவர். இங்குள்ள ஐ.சி.சி., அகாடமியில் செப். 5ல் இந்திய வீரர்களுக்கான வலை பயிற்சி துவங்கும்,”என்றார்.
‘ஜூனியர் சேவக்’ விளாசல்
டில்லி பிரிமியர் லீக் தொடரில் சேவக் மகன் ஆர்யவிர் 17, அசத்துகிறார். டில்லி சென்ட்ரல் கிங்ஸ் அணிக்காக துவக்க வீரராக அறிமுகமானார். தந்தையை போல அதிரடியாக பேட் செய்தார். ஈஸ்ட் டில்லி அணியின் அனுபவ பவுலர் நவ்தீப் செய்னி ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்தார். ‘ஸ்பின்னர்’ வகேலா ஓவரிலும் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார். 16 பந்தில் 22 ரன் விளாசினார். இப்போட்டியில் டில்லி சென்ட்ரல் கிங்ஸ் அணி (155/6), ஈஸ்ட் டில்லி அணியை (93) வீழ்த்தியது.
ஆர்யவிர் ஏற்கனவே கூச் பெஹார் டிராபியில் டில்லி அணிக்காக 297 ரன் எடுத்தார். இவரை டில்லி சென்ட்ரல் கிங்ஸ் அணி ரூ. 8 லட்சத்திற்கு வாங்கியது. இவரது தம்பி ‘ஸ்பின்னர்’ வேதாந்த் சேவக் 14, விரைவில் அசத்தலாம். இவரை ரூ. 4 லட்சத்திற்கு வெஸ்ட் டில்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.