இந்தியாவின் கர்நாடகாவில் வழமைக்கு மாறாக புது வண்ணத்தில் முட்டை இட்ட கோழி!

பொதுவாக கோழிகள் வெள்ளை நிறத்தில் முட்டையிடுவது வழக்கம். ஆனால் ஒரு கோழி நீல நிறத்தில் முட்டையிடும் வினோதம் கர்நாடகத்தில் நடந்து வருகிறது.
தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சையத் நூர். இவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அதில் ஒரு கோழி நீல நிற முட்டையிட்டுள்ளது. இதை பார்த்து சையத் நூர் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே கோழியிட்ட நீல நிற முட்டையை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அது வைரலாகி வருகிறது. இதுகுறித்து சன்னகிரி கால்நடை பராமரித்துறை உதவி இயக்குனர் அசோகா கூறுகையில், நீல நிறத்தில் கோழி முட்டை இருப்பதற்கு, மெடுசில் உள்ள பிலிவர்டின் எனப்படும் நிறமி காரணமாக இருக்கலாம். முட்டையின் மேல் பகுதி ஓடு மட்டுமே நீல நிறத்தில் இருக்கும். உள்பகுதியில் வெள்ளை, மஞ்சள் கரு இருக்கும். முதல்முறையாக தான் கோழி நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. தொடர்ந்து நீல நிற முட்டையிடும் பட்சத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்படும் என்றார்.