42 பந்தில் சாம்சன் சதம் – ஆசியாவுக்கு தயாராகும் சஞ்சு

கேரளா கிரிக்கெட் லீக் போட்டியில் 42 பந்தில் சதம் விளாசினார் சஞ்சு சாம்சன்.
கேரளாவில் உள்ளூர் ‘டி-20’ கிரிக்கெட் தொடர் நடக்கிறது. திருவனந்தபுரத்தில் நடந்த லீக் போட்டியில் கொல்லம், கொச்சி அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய கொல்லம் அணிக்கு விஷ்ணு (94), கேப்டன் சச்சின் பேபி (91) கைகொடுக்க, 20 ஓவரில் 236/5 ரன் குவித்தது.
கடின இலக்கைத் துரத்திய கொச்சி அணிக்கு சஞ்சு சாம்சன், சிக்சர் (7), பவுண்டரி (14) மழை பொழிந்தார். 42 பந்தில் சதம் எட்டினார். இவர் 51 பந்தில் 121 ரன் எடுத்து அவுட்டானார். பின் வரிசையில் ஆஷிக் (18 பந்து, 45 ரன்) வேகம் காட்ட, கொச்சி அணி 20 ஓவரில் 237/7 ரன் எடுத்து, 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
வரும் செப். 9-28ல் ஆசிய கோப்பை ‘டி-20’ தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் சாம்சன் இடம் பெற்றுள்ளார். எனினும் சுப்மன் கில் வருகையால், களமிறங்கும் லெவன் அணியில், இடம் கிடைக்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 42 பந்தில் சதம் அடித்து தனது ‘டி-20’ பார்மை மீண்டும் நிரூபித்துள்ளார் சாம்சன்.