Apple Watchஇல் அறிமுகமாகும் முக்கிய அம்சம்

ஆப்பிள் வாட்சில் கடந்த 2024ஆம் ஆண்டு காப்புரிமை பிரச்சனை காரணமாக, தடை செய்யப்பட்ட அம்சத்தை யூஸர்களின் வசதிக்காக நிறுவனம் மீண்டும் கொண்டுவந்துள்ளது.
ஓராண்டுக்கும் மேலாக காணாமல்போன பிளட் ஆக்ஸிஜன் கண்காணிப்பு அம்சம், இப்போது ஆப்பிள் வாட்சில் மீண்டும் வரவுள்ளது.
2024 தொடக்கத்தில் மாசிமோவுடனான காப்புரிமை தகராறு காரணமாக, அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 மாடல்களில் இந்த அம்சம் முடக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்திய புதுப்பிப்பின் மூலம், நிறுவனம் இதை மீண்டும் செயல்படுத்தும் வழியை கண்டறிந்துள்ளது.
ஐஓஎஸ் 18.6.1 மற்றும் வாட்ஸ்ஓஎஸ் 11.6.1 புதுப்பிப்புகள் மூலம், அமெரிக்காவில் உள்ள வாட்ச் சீரிஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 பயனர்கள் இந்த அம்சத்தைப் பெறுவார்கள்.
இந்த புதுப்பிப்புக்குப் பிறகு, இரத்த ஆக்ஸிஜன் செயலியின் சென்சார் தரவு, வாட்சிலிருந்து ஐபோனுக்கு அனுப்பப்படும். அங்கு அது செயலாக்கப்பட்டு ஹெல்த் ஆப் -இன் சுவாசப் பிரிவில் அதன் முடிவுகள் காண்பிக்கப்படும்.
இரத்த ஆக்ஸிஜன் அளவை அறிவதன் மூலம், உடல் நலம் மற்றும் சுவாசத்துடன் தொடர்புடைய பல்வேறு முக்கியமான சுகாதார தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். இந்த அம்சம் இல்லாமல் போனது, வாட்ச் சீரிஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 வாங்கிய பயனர்களுக்கு மிகப்பெரிய குறைபாடாக இருந்து வந்தது. முன்பு, மை ஹெல்த் ஆப்பைத் திறந்தபோது “இந்த அம்சம் இனி கிடைக்காது” என்ற தகவல் மட்டுமே தோன்றியது.
மருத்துவ உபகரண தயாரிப்பாளர் மாசிமோ தனது காப்புரிமையை மீறியதாக குற்றம் சாட்டியதால், 2024 ஜனவரியில் அமெரிக்காவில் தடை அமல்படுத்தப்பட்டது.
இதில், “LW/A” என முடியும் பாக எண்களைக் கொண்ட ஆப்பிள் வாட்ச் மாடல்களே பாதிக்கப்பட்டன.
சீரிஸ் 9-க்கு முந்தைய மாடல்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பிற மாடல்கள் வழக்கம்போல அனைத்து சுகாதார அம்சங்களையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தன.
இப்போது, புதிய சாஃப்ட்வேர் அப்டேட் மூலம், பயனர்கள் மீண்டும் முழுமையான சுகாதார அனுபவத்தைப் பெறுகிறார்கள். இது ஆப்பிள் வாட்சை மீண்டும் ‘சிறந்த ஹெல்த் டிராக்கர்’ நிலைக்கு கொண்டு செல்லும் என்று நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: இ-சிம் மாற்றம், புதிய வண்ண விருப்பங்கள்… கூகுள் நிகழ்வுக்கு முன்னதாக எதிர்பார்ப்பை கூட்டும் கூகுள் பிக்சல் 10 முக்கிய அம்சங்கள்…!
இரத்த ஆக்ஸிஜன் அம்சத்தை மீண்டும் கொண்டுவருவதன் மூலம், ஆப்பிள் வாட்ச் பயனர்கள் அவர்களின் சுகாதார கண்காணிப்பை முழுமையாக்கிக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். கடந்த ஒரு வருடமாக இருந்த சட்டப்பூர்வமான தடைகளைத் தாண்டி, பயனர்களின் நலனை முன்னிலைப்படுத்தி, ஆப்பிள் தனது ஹெல்த் டிராக்கிங் சாதனமாகிய வாட்சின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிசெய்துள்ளது.