இராணுவத்தால் தாக்கப்பட்ட இளைஞன் பலி – வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இராணுவ முகாமுக்குள் நுழைந்த ஒரு குழுவினர் இராணுவ அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், முகாமுக்குள் நுழைந்த மற்றொரு இளைஞர் முத்துஐயன்கட்டு குளத்தில் உயிரிழந்து கிடந்ததை அடுத்து இராணுவம் இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
சம்பவம் குறித்து இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதுடன், மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இளைஞரின் மரணத்திற்கு நீதி கோரி இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று ஹர்த்தால் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும், அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றும் மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறானது என்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எனினும் முப்படைகளுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ‘ரெலோ’ ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுமந்திரனால் தனிப்பட்ட முறையில் தீர்மானம் எடுத்து அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்காமல் எதிர்ப்பினை தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவர் சபாரத்தினம் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார்.
தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஆதரவை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து திரிபுவாதங்கள் மற்றும் பொய்யான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.
இந்த சம்பவத்தின் உண்மைகளைத் திரித்து, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், சில அரசியல் குழுக்கள் வடக்கு, கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு அவர்கள் ஏமாறக்கூடாது என்றும், உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.