உலகின் முதல் ஏ.ஐ இயர்பட்ஸ்.. 40 மணி நேர பேட்டரியுடன் அறிமுகம்

Mivi நிறுவனம் தனது உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) Mivi AI Buds-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயர்பட்ஸ், அதிவேக ஒலி தொழில் நுட்பத்தையும், ஏ.ஐ. திறன்களையும் ஒருங்கிணைத்து, உணர்வுபூர்வமான மற்றும் புத்திசாலித்தனமான இன்-இயர் துணையை உருவாக்கும் என Mivi நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இயர்பட்ஸ் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
Mivi AI Buds, தனித்துவமான வடிவமைப்பு மற்றும் பினிஷிங் உடன் பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. அதன் ஒரே உலோகத்தால் ஆன உடம்பு, மணற்கடிகாரத்தால் ஈர்க்கப்பட்ட அதன் ஸ்டெம் வடிவமைப்பு, பளபளப்பான ஃபினிஷிங் ஆகியவை ஈர்க்கத்தக்கவை. இந்த ஃபினிஷிங், இயர்பட்ஸை எளிதில் நழுவச் செய்யக்கூடியதாக இருந்தாலும், மற்ற இயர்பட்ஸிலிருந்து இதை தனித்துக் காட்டுகிறது. இந்த இயர்பட்ஸ் மிகவும் கச்சிதமானவை; கேஸ் உட்பட இதன் எடை 50 கிராமுக்கு சற்று அதிகமாகவே உள்ளது. இதில் புளூடூத் 5.4 மற்றும் LDAC கோடெக் ஆதரவு உள்ளது. Mivi நிறுவனம் 40 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள் கிடைக்கும் என உறுதியளிக்கிறது.
இந்த இயர்பட்ஸில் 13mm டிரைவர், 4 மைக்ரோஃபோன் அமைப்பு (quad microphone set up) உள்ளது. சத்தமான சூழல்களிலும் கூட அழைப்புகளை எளிதாகக் கையாளும் திறன் இதற்கு உள்ளது. மேலும், அழைப்பின் போது மறுமுனையில் இருப்பவர்கள், பேசுபவரின் குரலை தெளிவாக கேட்க முடிந்தது. இந்த இயர்பட்ஸ் IPX4 மதிப்பீட்டைக் கொண்டுள்ளதால், நீர் எதிர்ப்புத் திறன் கொண்டது. ஆடியோவின் சிறப்பம்சங்களில் 3D ஒலி அமைப்பு (3D soundstage), ஸ்பேஷியல் ஆடியோ ஆதரவு ஆகியவை அடங்கும். மேலும், இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதியும் உள்ளது.
இந்த இயர்பட்ஸின் முக்கிய சிறப்பம்சம் அதன் ஏஐ ஆதரவு. “Hi Mivi” என்ற எளிய சொல்லைக்கொண்டு Mivi ஏஐ அசிஸ்டன்ட்டை இயக்க முடியும். இந்த அசிஸ்டன்ட், பல துறை சார்ந்த ‘அவதார்களை’ கொண்டுள்ளது. ரூ.6,999 விலையுள்ள இந்த Mivi AI Buds, ரூ.7,000 விலை வரம்பில் புளூடூத் இயர்பட்ஸ்களைத் தேடுபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.