கிழக்கு ஆசிய சைபர் குற்றவாளிகளின் மோசடிக்கு இலக்காகும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கிழக்கு ஆசியாவில் இயங்கும் சைபர் குற்ற மையங்கள், இலங்கை உட்பட பல நாடுகளின் குடிமக்களை மோசடியாக வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐடி துறையில் வேலை வழங்குவதாகக் கூறி, சுமார் 50,000 பேர் இதற்காக இலக்காக்கப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்கள் மூலம் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் பரப்பப்படுவதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை குறைந்தது ஐந்து சைபர் குற்ற மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களில் மட்டும் இத்தகைய மையங்களுக்கு 11 இலங்கையர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோசடியில் இலங்கையில் வாழும் மக்களைத் தவிர, டுபாயில் பணிபுரியும் இலங்கையர்களும் இலக்காகி இருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. அவர்கள் ஐடி வேலை வாய்ப்புகள் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை முன்னிட்டு, தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வேலை வாய்ப்புகள் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரங்களுக்கு பதிலளிக்கும்போது அதிகமான கவனத்துடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களை எச்சரித்துள்ளது.