காசா போரை அதிகரிக்கும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

காஸாவில் போரை நிறுத்தக்கோரி ஆயிரக் கணக்கானோர் டெல் அவிவ் நகரில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.காஸா நகரை முழுமையாகக் கைப்பற்றத் திட்டமிருப்பதாக இஸ்ரேல் கூறிய மறுநாள் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
பாலஸ்தீன வட்டாரத்தில் பிணை பிடித்து வைக்கப்பட்டுள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தனர்.பிணையாளிகளின் படங்களையும் பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.பேரணியில் கிட்டத்தட்ட 100,000 பேர் பங்கெடுத்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.
“பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு நேரடியாக ஒரு தகவலைச் சொல்கிறோம்: காஸா பகுதிகளை நீங்கள் முற்றுகையிடுவதன் காரணமாகப் பிணையாளிகள் கொல்லப்பட்டால், நகரச் சதுக்கங்களிலும் தேர்தல் பிரசாரங்களிலும் எந்நேரத்திலும் எந்த இடத்திலும் உங்களை விடமாட்டோம்,” என்று கொல்லப்பட்ட பிணையாளி ஒருவரின் உறவினர் கூறினார்.
நெட்டன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை காஸா நகரை முழுமையாகக் கைப்பற்றும் பெருந்திட்டத்திற்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) ஒப்புதல் அளித்தது. அது உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் கடும் குறைகூறலுக்கு உள்ளானது.
இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகியவை வெளியிட்ட அறிக்கை காஸா நகரைக் கையகப்படுத்தும் இஸ்ரேலின் அண்மை முடிவைச் சாடியது.இவ்வளவு நெருக்குதலுக்கு இடையிலும் நெட்டன்யாகு அவரின் முடிவில் உறுதியாக இருக்கிறார்.
“காஸாவை நாங்கள் ஆக்கிரமிக்கப்போவதில்லை. நாங்கள் காஸாவை ஹமாஸ் குழுவிடமிருந்து விடுவிக்கப்போகிறோம்” என்று அவர் அண்மையில் சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையே காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதைப் பாலஸ்தீன ஆணையம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) கடுமையாகக் குறைகூறியது.
இஸ்ரேலின் திட்டம் புதிய குற்றத்திற்கு வழிவிடும் என்றும் அதனை உடனடியாகத் தடுத்துநிறுத்த வேண்டும் என்றும் ஆணையத்தின் அதிபர் மஹ்மூட் அபாஸ் கூறினார்.காஸா வட்டாரத்தில் பாலஸ்தீன நாட்டை முழுப் பொறுப்பேற்றுக்கொள்ளச் செய்வதற்கான முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.