இறுதி டெஸ்ட் போட்டியில் வெற்றி..! புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 224 ரன்களில் முடிவடைந்தது, ஆனால் சிராஜ் மற்றும் கிருஷ்ணாவின் பந்துவீச்சால் இங்கிலாந்து 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, வெறும் 23 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வாலின் 118 ரன்கள் மற்றும் ஆகாஷ் தீப், ஜடேஜா, சுந்தர் ஆகியோரின் அரைசதங்கள் இந்தியாவை 396 ரன்களுக்கு இட்டுச் சென்று, இங்கிலாந்துக்கு 374 ரன்கள் என்ற கடினமான இலக்கை அமைத்தன. இங்கிலாந்து சேஸிங்கில் நான்காவது நாள் முடிவில் இங்கிலாந்து 339/6 என்ற நிலையில் இருந்தது, 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
ஆனால், மழை மற்றும் மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் ஐந்தாவது நாளுக்கு தள்ளப்பட்டது. ஐந்தாம் நாளான நேற்று பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 367 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது. திருப்புமுனையாக சிராஜ் மற்றும் கிருஷ்ணா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது.
குறிப்பாக, சிராஜின் இறுதி விக்கெட்டான ஆட்கின்சனின் யார்க்கர் வீழ்ச்சி இந்தியாவுக்கு 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுத் தந்தது. இதன் மூலம், 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்தது. நான்காவது டெஸ்ட் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.
விக்கெட் மழையில் நனைந்த சிராஜ்
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நேற்றைய தின ஹீரோ சிராஜ் தான். கடைசி டெஸ்ட்டில் மட்டும் 9 விக்கெட்டுகளை சாய்த்த அவர்தான், இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளரும் அவர்தான் .5 போட்டிகளிலும் களைப்பின்றி விளையாடிய சிராஜ், இதுவரை 23 விக்கெட்டுகளை தட்டித் தூக்கியுள்ளார். இந்த வரிசையில், ஜோஸ் டாங்க்(19), ஸ்டோக்ஸ் (17), பும்ரா(14), பிரசித் கிருஷ்ணா (14) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
புள்ளிப் பட்டியல்
தற்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 28 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது, மேலும் இங்கிலாந்து 26 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது முதல் வெற்றியை எட்ஜ்பாஸ்டனில் பதிவு செய்து, பின்னர் ஒரு டிரா மற்றும் ஒரு தோல்வியுடன் தொடரை முடித்தது, இதனால் அவர்களின் புள்ளி சதவீதம் (PCT) 46.67 ஆக உள்ளது.
இங்கிலாந்து, லார்ட்ஸில் மெதுவான ஓவர் விகிதத்திற்காக இரண்டு புள்ளிகள் கழிக்கப்பட்டதால், 43.33 PCT உடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 36 புள்ளிகளுடன் 100 PCT இல் முதலிடத்தில் உள்ளது, பின்னர் இலங்கை 16 புள்ளிகளுடன் 66.67 PCT இல் இரண்டாவது இடத்தில் உள்ளது.