சீனாவில் முனைவர் பட்டத்திற்காகப் படிக்கும் உலகின் முதல் மனித இயந்திரம்

சீனாவில் மனித இயந்திரம் ஒன்று நாடகக் கலையில் முனைவர் பட்டப்படிப்பைப் பெற அனுமதி பெற்றுள்ளது.
ஷுவேபா என்ற இந்த மனித இயந்திரம் நாடகம் மற்றும் திரைப்படங்கள் போன்ற கலை வடிவங்களை படிக்கவிருக்கிறது. உலகிலேயே ஒரு மனித இயந்திரம் முனைவர் பட்டம் படிக்க அனுமதி பெறும் முதல் சம்பவமாகும்.
1.75 மீட்டர் உயரம் மற்றும் 30 கிலோ எடையுடைய ஷுவேபா 01, அழகான நபரை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மனிதர்களுடன் இயல்பாக பேசவும், பழகவும் முடியும். இது தற்போது ஒரு பிரபலமான சீனக் கலைக் கல்லூரியில், பாரம்பரிய சீன ஓபரா குறித்த கல்வியை, புகழ்பெற்ற பேராசிரியரின் வழிகாட்டலில் கற்றுக்கொண்டு வருகிறது.
ஷுவேபா 01 பயின்று வரும் நான்காண்டு படிப்பிற்கான கட்டணம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த அறிவிப்பின் பின்னர், சமூக வலைத்தளங்களில் விவாதம் சூடுபிடித்துள்ளது.
பலரும், “முகபாவனை மற்றும் குரல்வளம் ஆகியவை நாடகத்தில் மிக முக்கியமானவை. மனித இயந்திரத்திடம் இவை எப்படி இருக்கும்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். அதே நேரத்தில், ஷுவேபா சமூக ஊடகங்களில் பரபரப்பாக சிந்திக்க வைக்கும் பதில்களை அளிப்பதால், பலரும் அதனை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
அறிவியல் மற்றும் கலையின் சங்கமமாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது. மனித இயந்திரங்கள் கலைக்கல்வியிலும் பயில ஆரம்பித்துவிட்ட நிலையில், இது எதிர்காலத்தில் உலகக் கல்வி முறையை எப்படி மாற்றும் என்பது சுவாரசியமான கேள்வியாக எழுகிறது.