இலங்கையில் பிரபல தேரர் விரைவில் கைது – சிக்கலில் அரசியல்வாதிகள்

அரசியலுக்கு தொடர்புடைய பிரபல தேரர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கட்சியின் செயலாளர் பதவியை வகித்த ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தேரரே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளார்.
இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
கடத்தப்பட்ட நபர், மோதல் சம்பவம் குறித்து முறைப்பாடு அளிக்க அப்போதைய ஜனாதிபதியைச் சந்தித்து திரும்பி வந்தபோது கடத்தல் நடந்ததாக பாதுகாப்பு பிரிவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, நீண்ட விசாரணையைத் தொடர்ந்து, இதைத் திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த தேரர் மற்றும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.