சீனாவில் முன்னாள் காதலியை மறக்க நபர் எடுத்த நடவடிக்கையால் பதறிய குடும்பம்

சீனாவின் ஹுபே மாகாணத்தைச் சேர்ந்த சியாவ்லின் என்பவர், தனது முன்னாள் காதலியை மறந்து மனவேதனையிலிருந்து மீள தனியாக மலைப்பகுதிக்குச் சென்றார்.
இது அவருடைய குடும்பத்தினரிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
சியாவ்லின் தனது செல்போனை வீட்டில் விட்டு விட்டிருந்ததால், அவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை உருவானது. அவர் காணாமல் போனதைத் தொடர்ந்து அவரது சகோதரர் பொலிஸாரிடம் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில், அதிகாரிகள் சியாவ்லின் வீட்டில் விசாரணை நடத்தினர். பின்னர், 100க்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். காவல் நாய்கள், ஆளில்லா வானூர்திகள் என பல தொழில்நுட்ப உதவிகள் பயன்படுத்தப்பட்டும் முதலில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்த தேடுதலின் முடிவில், கண்காணிப்பு கேமரா வழியாக சியாவ்லினின் காட்சிகள் பதிவானதைத் தொடர்ந்து அவர் 40 கிலோமீட்டர் தொலைவில், கிழிந்த ஆடையுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
முதல் மூன்று நாட்கள் பட்டினியாக இருந்த சியாவ்லின், பின்னர் மலையில் கிடைத்த பழங்கள் மற்றும் நீருடன் உயிர் வாழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் சீன சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. சியாவ்லினின் செயல், அவருடைய மனநிலை மற்றும் தனிமையை எதிர்கொள்வது போன்ற விடயங்கள் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.