யூடியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. இந்த மாதம் அமலாகும் நடைமுறை

வீடியோக்களை பதிவேற்றும் தளங்களில் முக்கிய தளமாகவும் வருமானம் தரக்கூடியதாகவும் யூடியூப் இருந்து வருகிறது. தற்போது யூடியூப்பில் இருந்து பெறப்படும் வருமானத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் கொண்டுவந்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள், உண்மையான படைப்பாளர்களைப் பாதுகாக்கவும் சேனல்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது, மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் வீடியோக்கள், ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்கும் வீடியோக்கள், குறைந்த தரம் கொண்ட வீடியோக்களுக்கு இனி வருமானம் வழங்குவதை யூடியூப் கடினமாக்கியுள்ளது.
இனி அசல் உள்ளடக்கத்தை புதிதாக உருவாக்கும் படைப்பாளிகளுக்கு மட்டுமே வருவாய் வழங்கப்படும். அதுவே அதிகம் விளம்பரப்படுத்தப்படும்.
அதாவது, பார்வையாளருக்கு நுண்ணறிவு மற்றும் கற்றலை வழங்கும் கல்வி வீடியோக்கள், உண்மையான படைப்பாற்றல் மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய பொழுதுபோக்கு வீடியோக்கள் ஆகியவற்றுக்கு வருமானம் வழங்கப்படும் எனவும், அவை அதிகம் விளம்பரப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி, 1,000 சந்தாதாரர்கள், கடந்த 12 மாதங்களில் 4,000 பொதுப் பார்வை நேரம் அல்லது கடந்த 90 நாட்களில் 10 மில்லியன் குறுவீடியோ பார்வையாளர்கள் கொண்டவர்களே யூடியூப்-ல் வருமானத்திற்காக முறையிட முடியும்.
இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின், வருமானத்தை அங்கீகரிப்பதற்கு முன் யூடியூப் உங்கள் உள்ளடக்கத்தின் அசல் தன்மையை மதிப்பிடும். அதன்பின்னே வருமானம் வழங்கப்படும்.
இந்த புதிய விதிமுறை வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என யூடியூப் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.