சர்ச்சையில் சிக்கிக்கொண்ட 2 சிங்கப்பூர் தமிழ் அமைச்சர்கள் – அம்பலமான இரகசியங்கள்
சிங்கப்பூரில் ரிடவுட் வீதியில் அமைந்துள்ள 2 பங்களா வீடுகளை 2 தமிழ் அமைச்சர்கள் வாடகைக்கு எடுத்திருக்கும் விவகாரம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா. சண்முகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் ரிடவுட் வீதிகளில் அமைந்துள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இது குறித்து சிங்கப்பூர் நில ஆணையம் இம்மாதம் 12 ஆம் திகதி அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக கவனிக்கப்படும் என பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தகவல் கோரியுள்ளதாகவும் அமைச்சர் தியோ சீ ஹியெனிடம் தாம் கூறியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதுகுறித்துக் கேள்விகளைச் சமர்ப்பித்திருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.
பொதுச் சொத்து பற்றிக் கேள்வி கேட்பதற்குப் பொது மக்களுக்கு உரிமை உண்டு என்று உள்துறை அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார்.
“ரிடவுட் வீதியில் இருக்கும் பங்களா வீட்டை நான் வாடகைக்கு எடுத்துள்ளேன். இதில் மறைப்பதற்கு எதுவம் இல்லை. நான் செய்தது என்னவென்று எமக்கு தெரியும். விதிமுறைகளைப் பின்பற்றியே அனைத்தும் நடந்துள்ளது.
யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அது பற்றிய வெளிப்படையான அணுகுமுறையே சிறந்தது. அரசாங்கத்தின் மீது பொது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அந்த அணுகுமுறையே உதவும்.
அத்துடன் இந்த விடயத்தில் என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும் ஜூலை மாதம் நாடாளுமன்றம் கூடும்போது அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தரப்படும்” என அமைச்சர் சண்முகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரிடவுட் வாடகை வீட்டு விவகாரத்தை ஆய்வு செய்யவும், அதன் தொடர்பான அனைத்து விவரங்களையும் அடுத்த நாடாளுமன்றம் கூட்டத்துக்குமுன் வெளியிடவும் பிரதமர் ஒப்புக்கொண்டது குறித்து மகிழ்ச்சியான உள்ளதென வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் தெரிவித்துள்ளார்.