இலங்கை தொடரும் மாணவர் கடத்தல் – அதிஷ்டவசமாக தப்பிய மாணவி
பண்டாரவளை நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 10 வயதுடைய மாணவியை வேனில் கடத்திச் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.
அத்துடன் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை துஹுல்கொல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியையே கடத்திச் செல்ல வேனில் குழுவொன்று தயாரானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி பாடசாலை முடிந்து வீடு செல்வதற்கு பஸ்ஸுக்காக குறித்த மாணவி தனியாக நடந்து சென்றபோது, தொலைவில் வெள்ளை நிற வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது.
பின்னர் கறுப்புத் துணியால் முகத்தை மூடியிருந்த இளைஞர் ஒருவர், வேனில் இருந்து இறங்கி மாணவியின் அருகில் வந்து, ‘உனது தாயார் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சொக்லேட்டை உனது தாயார் உன்னிடம் கொடுத்து தன்னுடன் வேனில் வரச் சொன்னதாகவும்’ அந்த மாணவியிடம் கூறியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அச்சமடைந்த மாணவி, பண்டாரவளை நகரில் உள்ள கடைக்கு ஓடிச் சென்று தனது நிலையைக் கூறியுள்ளார். அதனையடுத்து இது தொடர்பில் தாயாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், மாணவி தனது தாயுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.