மலைசியாவில் அதிகரித்து வரும் அரியவகை விலங்கு கடத்தல்கள்

மலேசியாவில் அரியவகை விலங்குகளின் கடத்தல் கூடியதற்குப் பொருளியல் நெருக்கடியும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் வனவிலங்கு விற்பனையின் அதிகரிப்பும் சில முக்கிய காரணங்கள்.அதன் விளைவாக கடத்தலுக்கான இடமாக மலேசியா பயன்படுத்தப்படுகிறது என்றார் மலேசிய இயற்கை வளங்கள், சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது.
அண்மைய வனவிலங்குச் சம்பவங்களைச் சுட்டி பேசிய நிக் நஸ்மி, இந்தியாவின் சில வட்டாரங்களில் வனவிலங்குகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதால் அங்கு அவை அதிகம் கடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
“உள்ளூர் விலங்குகளும் அரியவகை வனவிலங்குகளும் மற்ற நாடுகளுக்குக் கடத்திச் செல்லப்படும் நாடுகளில் ஒன்றாக மலேசியா உள்ளது. அது இந்தியாவில் உள்ள கடத்தல்காரர்களை அதிகம் ஈர்க்கிறது,” என்று நிக் நஸ்மி கூறினார்.
இந்தியா, வியட்னாம் போன்ற இதர நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படும் முன் பெரும்பாலான அரியவகை வனவிலங்குகள் அண்டை நாடுகளிலிருந்து மலேசியாவுக்குக் கடத்தப்படுவதாக புலனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.
பொருளியல் நெருக்கடியாலும் பல தனிநபர்கள் கடத்தலுக்குத் துணை போவதாக நிக் நஸ்மி குறிப்பிட்டார்.
“வனவிலங்குகளைப் பயணப் பெட்டிகளில் வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்ல கொடுக்கப்படும் ரொக்கமும் இதர பயண சலுகைகளும் அத்தகையோரைக் கவர்கின்றன,” என்றார் அவர்.
சிவந்த காதுடைய சிலைடர் ஆமைகள், பச்சை அமெரிக்க உடும்பு, ஆப்பிரிக்க கடலாமைகள், பச்சை மர மலைப்பாம்பு ஆகியவை இந்தியாவுக்குக் கடத்தப்படும் பெரும்பாலான வனவிலங்குகள் என்று அமைச்சர் நிக் நஸ்மி சொன்னார்.