ஜெர்மனி வாழ் மக்களுக்கு அபராதம் செலுத்துமாறும் வரும் தகவல் குறித்து எச்சரிக்கை

ஜெர்மனியில் மோசடிக்காரர்கள் போலியான அபராதங்களை அனுப்பி மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதாக, ஜெர்மனியின் தேசிய போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது, ஜெர்மனியின் தேசிய போக்குவரத்து ஆணையம் சார்பாக வரும் போலியான மின்னஞ்சல்கள் அதிகமாக அனுப்பப்படுகின்றன.
குறித்த மின்னஞ்சல்களில் மக்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டு அவர்களை அபராதம் செலுத்துமாறும் வலியுறுத்தப்படுகின்றது.
எனினும், இவ்வாறான மின்னஞ்சல்களுக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அபராதங்கள் விதிக்கப்படுவதற்கு முன்னர் ஒரு அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெறும்.
ஆனால், எந்த வித விசாரணைகளுமின்றி அனுப்பப்படும் போலியான மின்னஞ்சல்களில் அபாரதத் தொகையை உடன் செலுத்துமாறு நிர்பந்திக்கப்படுகின்றது.
இவை பெரும்பாலும் ‘.ru’ என்று முடியும் மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து வருகின்றன.
இத்தகைய மின்னஞ்சல்கள் உங்களுக்கு வந்தால் ஏமாந்து பணத்தை செலுத்த வேண்டாம். அத்துடன், அதில் வரும் linkகளை கிளிக் செய்யவும் வேண்டாம். ஏனெனில் அவற்றில் தீங்கிழைக்கும் மென்பொருள் ஏதேனும் இருக்கக்கூடும்.
இதன்மூலம், மோசடிக்காரர்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை திருட முயற்சிக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இவ்வாறான மின்னஞ்சல்கள் உங்களுக்கு அனுப்பப்பட்டால் உடனடியாக உள்ளூர் போக்குவரத்து அதிகாரியிடம் முறைப்பாடு செய்யுமாறு, நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.