ஜெர்மனியில் குடியுரிமை சட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம் – இரத்து செய்யப்படும் திட்டம்

ஜெர்மனியில் வினைத்திறனாக செயற்படும் வெளிநாட்டவர்களுக்கு மூன்று ஆண்டுகள் நாட்டில் வசித்த பின்னர் குடியுரிமை வழங்கும் திட்டத்தை இரத்து செய்ய புதிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டம் ஜூன் 2024இல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு விண்ணப்பதாரர்கள் C1 நிலை ஜெர்மன் மொழி திறனையும், வேலை, கல்வி அல்லது சமூகத்தில் குறிப்பிடத்தக்க நல்ல வினைத்திறனையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இந்நிலையில், குறித்த சட்டத்தை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக சன்சிலராக பதவியேற்கவுள்ள ஃப்ரீட்ரிக் மெர்ஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் எப்போது ரத்து செய்யப்படும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனினும், இந்த தீர்மானம் ஜெர்மனியின் குடியுரிமை கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முக்கிய மாற்றமாகும்.
எவ்வாறாயினும், ஜெர்மனி குடிமக்களை திருமணம் செய்த வெளிநாட்டவர்களுக்கு இங்கு ஒரு விதிவிலக்கு உள்ளது.
அவர்கள் ஜெர்மனியில் மூன்று ஆண்டுகள் வசித்து, தங்களின் ஜேர்மன் துணையுடன் குறைந்தது இரண்டு ஆண்டுகள் திருமண வாழ்க்கையிலும் இருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த விதிவிலக்கு, குடும்ப அடிப்படையில் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
இது தவிர, ஏனையோருக்கு புதிய அரசாங்கம் பதவியேற்கும் மே 7ஆம் திகதி வரை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.
மே 7ஆம் திகதிக்கு பிறகு மெர்ஸ் தலைமையிலான அரசாங்கம் இந்தத் திட்டத்தை இரத்து செய்யும் சட்ட மூலத்தை தயாரித்து வாக்கெடுப்புக்கு விடும்.
அதன் பின்னர், குறித்த குடியுரிமை வழங்கும் திட்டம் நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.