வேற்று கிரகத்தில் உயிர்கள்: ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட வலுவான ஆதாரங்கள்

பூமியைத் தவிர்த்து வேறு எதுவும் கோள்களில் மனிதர்களோ அல்லது வேற்றுகிரக வாசிகளோ வாழ்கிறார்களா என்பது குறித்து ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் சமீபத்தில் K2 – 18 b என்ற கோளில் நுண்ணுயிரிகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பூமியை விட 8.6 மடங்கு பெரியது.
ஜேம்ஸ் வெப் எனும் தொலை நோக்கியை வைத்துதான் விஞ்ஞானிகள் இந்த கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த K2-18b கிரகம் 5.2 மடங்கு பருமனாகவும், 9 மடங்கு அதிக நிறை கொண்டதாக இருக்கிறது. இது ஹைட்ரஜன் வாயுவால் நிரம்பிய வளிமண்டலமுடையது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவேளை கடல்கள் (அ) பாறை உட்புறங்களில் அடுக்கடுக்காக இருக்கலாம்.
நட்சத்திர ஒளியில் ஏற்படும் சிறிய மாற்றங்களை அளவிடுவதன் மூலம், நூற்றுக்கணக்கான டிரில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு வளிமண்டலத்தின் மூலக்கூறு கலவையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முடிவுகள் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தன.
இந்த கிரகம் பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தூரத்தில் சிம்ம நட்சத்திரக் கூட்டத்தில் உள்ளது.இந்த கிரகத்தில் உள்ள சில மூலக்கூறுகள் பூமியில் இருக்கக்கூடியவை. அதுவும் எளிமையான உயிரினங்களால் மட்டுமே உருவாக்க முடியும் வேதியல் சேர்மங்கள். இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு தலா 1 விழுக்காடு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். ஆரம்பத்தில் நீராவி இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் பின்னர் 0.1%க்கும் குறைவாகவே உள்ளதாகக் கூறுகின்றனர். இவைத் தவிர டைமெத்தில் சல்பைடு (DMS) மற்றும் டைமெத்தில் டைசல்பைடு (DMDS) ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை பூமியில் முதன் முறையாக உருவானவை என கருதப்படும் ஆல்கா போன்ற நுண்ணுயிர்களால் உருவாக்கப்பட்டவை.
இதன் மூலம் அந்த கிரகத்தில் நுண்ணுயிர்கள் இருக்கலாம் என்பதை வலுவாக நம்புகிறோம். உண்மையிலேயே அங்கு தெளிவான உயிரினங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அந்த கிரகத்தில் அதிகமாக உள்ளன. இந்த ஆராய்ச்சி சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள உயிர்களை தேடுவதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். தற்போதைய வசதியுடன் உயிர்கள் வேற்று கிரகத்தில் இருக்கின்றனவா என்பதை நம்மால் உறுதி செய்ய முடியும். 1990களில் இருந்து சூரிய மண்டலத்திற்கு அப்பால் சுமார் 6000 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு எக்ஸோ பிளானட் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளார்கள். இந்த கோள்களிலும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வேற்று கிரகத்தில் உயிர்கள் இருக்கின்றனவா என்கிற ஆராய்ச்சியின் முதற்கட்ட பணிகளாக இந்த கண்டுபிடிப்பை எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளும் போது வேற்று கிரக உயிரினங்கள் இருப்பது என்பது நிச்சயம் உறுதி செய்யப்படும்” என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியை தவிர்த்து வேற்று கிரகங்களில் உயிரினங்கள் அல்லது மனிதர்கள் உள்ளனரா? என்பது குறித்து நீண்ட நாட்களாகவே கேள்விகள் எழுகின்றன. வேற்றுகிரக உயிரினங்களை ஏலியன்ஸ் என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். பூமியை தவிர்த்து மற்ற எந்த கிரகத்திலும் உயிரினங்கள் வாழ்வதற்கு மிகச் சரியான சாத்தியக்கூறுகள் இல்லாத காரணத்தினால் மற்ற எந்த கோள்களிலும் உயிரினங்கள் இருக்காது என்று விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர் கூறி வந்தனர். இருப்பினும் வேற்றுகிரக உயிரினங்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த நிலையில், அங்கு உயிரினங்கள் வசிக்க போதுமான சூழல் உள்ளதா என்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.