இந்தியா – கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் இளைஞர் ஒருவர் பலி

விளையாட்டு வினையாகும் என்பதற்கேற்ப இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அண்மையில் அங்குள்ள மீரட் நகரில் இருக்கும் கஜூரி என்ற கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளான்.அப்போது தன் தாத்தா உரிமம் பெற்று வைத்திருந்த கைத்துப்பாக்கியையும் எடுத்துச் சென்றிருக்கிறான் அந்தச் சிறுவன். அச்சமயம் வீட்டில் யாரும் இல்லை.
பக்கத்து வீட்டில் வசிக்கும் 18 வயதான முகம்மது கைஃப் என்ற இளையருடன் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியை ரசித்துக்கொண்டிருந்த அந்த 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், திடீரென உற்சாகமடைந்து தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த இளையரின் முன் நீட்டி விளையாட்டுக் காட்டினான். சிறுவனைக் கண்டு அரண்டு போனார் அந்த இளையர்.
அவர் பயந்தது போன்றே, சிறுவனின் விரல் எதிர்பாராதவிதமாக விசையை அழுத்திவிட, துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு முகம்மது கைஃப் இதயத்தைத் துளைத்தது.
இதில் அவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று துப்பாக்கியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.இதில் சிறுவன் தவறுதலாகத் துப்பாக்கி விசையை அழுத்தியது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது