இந்தியா: 357 இணைய விளையாட்டுத் தளங்கள்,2,400 வங்கிக் கணக்குகளை முடக்கிய நிதியமைச்சு

பொருள் சேவை வரி (GST) புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 357 சட்டவிரோத வெளிநாட்டு இணைய விளையாட்டுத் தளங்களை முடக்கியுள்ளதாகவும் ஏறத்தாழ 2,400 வங்கிக் கணக்குகளைப் பற்றுகை செய்துள்ளதாகவும் இந்திய நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திப்பட நடிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் அத்தகைய தளங்கள் குறித்த விளம்பரங்களில் தோன்றினாலும் அவற்றைப் பயன்படுத்துவது தொடர்பில் பொதுமக்களை அமைச்சு எச்சரித்து இருக்கிறது.
அத்துடன், ஏறக்குறைய 700 இணைய விளையாட்டு நிறுவனங்கள் GST புலனாய்வுத் தலைமை இயக்ககத்தின் (DGGI) கண்காணிப்பில் உள்ளன. அவை, முறையாகப் பதிவுசெய்யாமல், வரி செலுத்தவேண்டிய வருவாயை மறைத்தும் வரிக் கடப்பாடுகளைப் புறந்தள்ளியும் GST செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது.
மேலும், வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றவர்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துவதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, DGGT அத்தகைய 166 கணக்குகளை முடக்கியுள்ளது.
“இதுவரை, 357 சட்டவிரோத இணைய விளையாட்டு நிறுவனங்களோ அவற்றின் இணையத்தளங்களோ முடக்கப்பட்டுள்ளன. மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து டிஜிஜிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது,” என்று அமைச்சு சனிக்கிழமை (மார்ச் 22) ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தது.
வேறு இரு வழக்குகள் தொடர்பில், கிட்டத்தட்ட 2,400 வங்கிக் கணக்குகளை பற்றுகை செய்த DGGI, ஏறக்குறைய ரூ.126 கோடி பணத்தை முடக்கிவைத்துள்ளது.
GST சட்டப்படி, இணையத்தில் பணம் கட்டி ஆடும் விளையாட்டுகள் ‘பொருள்’ விநியோகமாக வகைப்படுத்தப்பட்டு, அவற்றுக்கு 28% வரி விதிக்கப்படுகிறது.அத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் GST சட்டத்தின்கீழ் பதிவுசெய்ய வேண்டியது அவசியம்.
இவ்வாண்டிற்கான இந்திய பிரிமியர் லீக் (IPL) டி20 போட்டிகள் தொடங்கிவிட்ட நிலையில், சட்டவிரோத விளையாட்டு நடவடிக்கைகளைத் தடுக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பர் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும், சட்டத்தின்கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட இணையவழி விளையாட்டுத் தளங்களில் மட்டுமே ஈடுபாடு கொள்ளுமாறும் பொதுமக்களை அது அறிவுறுத்தியுள்ளது.