சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்திய ஜனாதிபதி அநுர

மூன்று மில்லியன் சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலாத் தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ள்ளார்.
எனவே, இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த ஆண்டு பாதீட்டில் சுற்றுலா அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அதன் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
சுற்றுலாத் துறையில் புதிய முன்னெடுப்பாக இந்த ஆண்டு 03 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர எதிர்பார்க்கப்படுவதோடு அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்துவது குறித்தும் இதன்போது பரவலாக ஆராயப்பட்டது.