கோப் குழுவின் விசாரணை மூலம் வரிச் சுமையை குறைக்க முடியும் – யூ.ஆர். டி சில்வா
பாராளுமன்ற கோப் குழு அறிக்கைகளில் வெளிவரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்தினால் அரசாங்கம் மக்கள் மீது இவ்வளவு வரிசுமையை திணிக்கத் தேவையில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வா தெரிவித்தார்.
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குற்றங்கள் தொடர்பில் அறிக்கையிடுவது சம்பந்தமாக ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், முறையாக விசாரணை நடத்தி ஊழல் மோசடிப் பணத்தை மீள பெற்றுக்கொள்ள முடியுமானால் அரசாங்கம் இந்தளவு மக்கள் மீது வரிச் சுமைகளை சுமத்த தேவையில்லை.
நாட்டில் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமானால் பொருளாதார பிரச்சினைக்கு ஓரளவேனும் தீர்வு கிடைக்கும்.
கோப் குழு அறிக்கையில் வெளிவரும் விசாரணை அறிக்கை தொடர்பில் இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது.
அரச அதிகாரிகளின் கோடிக்கணக்கான மோசடிப் பணத்தை திருப்பி எடுக்க முடியுமானால் சாதாரண மக்கள் மீது வரிச் சுமைகளை அதிகரிக்கவேண்டிய தேவை இருக்காது.
ஆனால் அரசாங்கம் அதனை செய்யாமல் மக்கள் மீது வரி அதிகரிப்புகளை மேற்கொண்டு நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்கிறது.
அதனால் அரசாங்கம் மோசடிக்காரர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளாமல் மக்கள் மீது வரியை அதிகரித்து மக்களை கஷ்டத்துக்குள்ளாக்கி வருகிறது.
அதனால் கோப் குழு விசாரணையில் வெளிவரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.