போப் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் : வாடிகனில் ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் நிமோனியா பாதிப்பால் கடந்த 14ம் திகதி முதல் ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு இரு நுரையீரலிலும் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்ப கட்ட சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு இருந்தாலும் அது கட்டுக்குள் இருப்பதாக கூறி உள்ளனர்.
இந்நிலையில், 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு போப் பிரான்சிசின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து வாடிகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “போப் இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கினார்.
நுரையீரல் தொற்றால் அவர் இன்னமும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் கூறினாலும், உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை முதல் அவருக்கு சுவாச பிரச்னைகள் இல்லை. மருத்துவமனை அறையிலிருந்தே தனது பணிகளை தொடங்கி இருக்கிறார்” என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போப் பிரான்சிஸ் குணமடைய வேண்டி, வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கடும் குளிரிலும், மழையிலும் 4,000க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து பிரார்த்தனையில் பங்கேற்றனர். மேலும், உலகம் முழுவதும் பல இடங்களில் போப் பிரான்சிசுக்காக தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன.