பனாமா ஹோட்டலில் இலங்கை – இந்தியர்களை அடைத்து வைத்துள்ள அமெரிக்கா – உதவி கோர கதறல்

பனாமா நாட்டிலுள்ள ஹோட்டலில் சட்டவிரோதமாக குடியேறிய 300-க்கும் மேற்பட்ட இலங்கை இந்தியர்களை அமெரிக்கா அடைத்து வைத்துள்ளது.
அந்த ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக உதவி கோரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பல்வேறு வெளிநாட்டினரை கண்டறிந்து, அவர்களை டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் நாடு கடத்தி வருகின்றது.
நேரடியாக அமெரிக்காவில் இருந்து அதிகளவிலான மக்களை நாடு கடத்துவதில் சிக்கல் இருப்பதால் பனாமா நாட்டு வழியாக சிலரை நாடு கடத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக இரு நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீன நாடுகளைச் சேர்ந்த 300 பேரை கொலம்பியா மாகாணம் வழியாக பனாமாவுக்கு அமெரிக்கா அழைத்துச் சென்றுள்ளது.
அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் 300 பேரை துப்பாக்கி ஏந்திய பொலிஸாரின் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த ஹோட்டலின் கண்ணாடி ஜன்னல் வழியாக, ’எங்களை காப்பாற்றுங்கள், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்ற சொற்கள் அடங்கிய காகிதத்தை காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாடு கடத்தப்படுபவர்களின் சுதந்திரத்தை பறிக்கவில்லை, அவர்களின் பாதுகாப்புக்காகதான் பொலிஸாரின் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி அவர்களை வெளியே அனுப்ப இயலாது என பனாமா அரசு தெரிவித்துள்ளது.