அயர்லாந்துப் பெண்ணின் கொலை வழக்கு; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த இந்திய நீதிமன்றம்

வெளிநாட்டினர் விரும்பி வருகை தரும் கோவாவில், 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம், அயர்லாந்து நாட்டுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அந்த வழக்கில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது இந்திய நீதிமன்றம். இதனை புலனாய்வுத் துறை அதிகாரி ஃபிலோமினோ தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டில் அயர்லாந்து நாட்டில் இருந்து சுற்றுலா மேற்கொண்டு கோவா வந்திருந்தார் 28 வயதுப் பெண் ஒருவர். அப்போது, அவருடன் நட்புடன் பழகி வந்தார் விகாட் பகாத் என்ற நபர். அந்த நபருடன் நம்பிக்கையாகப் பழகிய அயர்லாந்துப் பெண்மணியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, பின்னர் அவரை பீர் போத்தல்களால் தாக்கிக் கொன்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்தப் பெண்ணுக்காக வாதாடிய வழக்கறிஞர் விகாஸ் வர்மா, கொல்லப்பட்ட அந்தப் பெண்ணின் உடல் கோவாவின் பாலோலெம் கடற்கரையை ஒட்டிய காட்டுப் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் முகம் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் பல காயங்கள் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வழக்கறிஞர் விகாஸ் மேலும் கூறுகையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால், இந்த இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. இருப்பினும், அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்கு இந்தத் தீர்ப்பு சற்று ஆறுதலைத் தரும் என்று தெரிவித்தார்.
குற்றவாளி பகத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், தண்டனையைக் குறைக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.