இலங்கையில் இருந்து பிரான்ஸ் சென்ற முப்படை வீரர்கள் ஏழு பேர் மாயம்
பிரான்ஸில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்விற்கு சென்ற இலங்கை முப்படை வீரர்கள் 7 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 CISM உலக இராணுவ டிரையத்லான் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை முப்படை வீரர்கள் ஏழு பேர் பிரான்சில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போனவர்களில் நான்கு இராணுவ அதிகாரிகள், ஒரு கடற்படை அதிகாரி மற்றும் விமானப்படையைச் சேர்ந்த இருவர் அடங்குவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 5ம் திகதி முதல் 9ம் திகதி வரை பிரான்சில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை பாதுகாப்பு சேவைகள் டிரையத்லான் அணி மே 4 அன்று நாட்டை விட்டு வெளியேறியது. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளுடன் 5 ஆண்கள் மற்றும் 5 பெண் வீரர்கள் அணியில் இருந்தனர்.
இந்த அணி உயரடுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனிப்பட்ட நிகழ்வுகள், குழு நிகழ்வுகள் மற்றும் கலப்பு குழு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
இக்குழுவினரின் கடவுச்சீட்டுகள் பாதுகாப்பு சேவைகள் டிரையத்லான் தலைவரும், தூதரகத்தின் பிரதானியுமான கமாண்டர் லக்மால் வீரக்கொடி (இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்) வசம் இருந்தன.தலைமை அதிகாரி மதிய உணவுக்குக் கிளம்பியபோது குழுவில் உள்ள ஏழு பேரும் தங்கள் பாஸ்போர்ட்களை எடுத்துக்கொண்டு தங்குமிடத்திலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அந்த ஏழு பணியாளர்களும் பிரான்சில் வேலை தேடி தப்பிச் சென்றதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதால், அதிகாரிகளின் பாஸ்போர்ட்கள் உயர் அதிகாரியிடம் வைக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.