ஸ்மார்ட்போன் தரவுகளின் பாதுகாப்பை அதிகரிக்க கூகுளின் புதிய நடவடிக்கை

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க கூகுள் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அதன் புதிய வசதியாக ‘அடையாள சோதனை’ என்ற யுக்தி கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் திருடு போகும்பட்சத்தில் அதில் இருக்கும் தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க இந்த வகையிலான பயோமெட்ரிக் கொண்டு வரப்பட்டுள்ளது.
“தவறான நபர்களின் கைகளில் கிடைக்கப்பெற்ற ஸ்மார்ட் போன்கள் மூலம் அதன் உரிமையாளர்களின் தகவல்களை பயன்படுத்தி மோசடி வேலையில் ஈடுபட முடியும்” என கூகுளின் வலைப்பதிவு குறிப்பிட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 15 கொண்டு இயங்கும் சாம்சங் மற்றும் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களில் இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனின் கடவுச் சொல் தெரிந்தாலும் கூட, அதனை திருடியவர்களால், தகவல்களை பெற முடியாது எனக் கூறப்படுகிறது. இதில் பயோமெட்ரிக் முறையை, பயனாளிகள் முற்றிலும் முடித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அம்சம், 3-ஆம் கட்ட பயோமெட்ரிக்ஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டோ, மாஸ்க், போலியான கைரேகைகள் மூலமாகக் கூட இந்த 3-ஆம் கட்ட பயோமெட்ரிக்ஸ் இருக்கும் ஸ்மார்போன்களை அன்லாக் செய்ய முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் இல்லாமல் போனை திருடியவர்களால் அதன் பின்னை மாற்ற முடியாது. மேலும், “Find My Device” அம்சத்தையும் ஆஃப் செய்து வைக்க முடியாது.
இதேபோல், ஸ்னார்ட்போன் திருடப்பட்டால் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க பயனர்களுக்கு உதவும் வகையில், திருட்டு கண்டறிதல் மற்றும் ஆஃப்லைன் டிவைஸ் லாக் போன்ற கூடுதல் அம்சங்களை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.