சஜித் பிரேமதாச, எல்.எம். அபேவிக்ரம காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றிய இணைத் தலைவர்களாக தெரிவு
10ஆவது பாராளுமன்றத்தின் இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
10ஆவது பாராளுமன்றத்தின் இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தை மீண்டும் ஸ்தாபிப்பது தொடர்பான கூட்டம் 2025.01.08 ஆம் திகதி இடம்பெற்ற போதே இத்தெரிவு இடம்பெற்றது.
இதன்போது, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், இணை அமைப்பாளர்களாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அனுஸ்கா திலகரத்ன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இங்கு உரையாற்றிய ஒன்றியத்தின் இணைத் தலைவர்கள், முழு உலகமும் காலநிலை மாற்றம் தொடர்பில் கவனம் செலுத்தும் காலப்பகுதியில் காலநிலை மாற்றத்தினால் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் அதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்காலத்தில் கூட்டாகக் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.