கலிபோர்னியா காட்டு தீ ; கமலா ஹாரிஸின் சிங்கப்பூர் பயணம் ரத்து
அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூர், பஹ்ரேன் மற்றும் ஜெர்மனிக்கான தமது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் காட்டுத் தீ எரிந்துகொண்டு இருப்பதால், முன்னதாகத் திட்டமிடப்பட்ட அந்த மூன்று நாடுகளுக்கான பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
திருவாட்டி ஹாரிஸ் ஜனவரி 13 முதல் 17 வரை ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்குச் செல்வார் என்றும் அப்போது சிங்கப்பூர், பஹ்ரேன் மற்றும் ஜெர்மனிக்கும் வருகைபுரிவார் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ஹாரிஸ், ஜனவரி 20ஆம் திகதி துணை அதிபர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் மேற்கொள்ள இருந்த கடைசி அதிகாரத்துவப் பயணம் அது.
தற்போது அந்தப் பயணத்தை அவர் ரத்து செய்வதற்குக் கூறப்பட்ட அதே காரணத்தை அதிபர் ஜோ பைடனும் அண்மையில் தெரிவித்து தமது இத்தாலி பயணத்தை ரத்து செய்து இருந்தார்.
கலிஃபோர்னியா காட்டுத் தீ வரலாறு காணாத அளவுக்கு மோசமடைந்து வருகிறது. ஆறு பேர் தீக்கு பலியாகிவிட்டதாகவும் 180,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.