Champions Trophy 2025 – இந்தியாவின் ஆடும் 11 தெரிவு செய்வதில் இழுபறி
9வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 19 ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
பிப்ரவரி 19 ஆம் திகதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும், முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிக்கு முன் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பலரும் பரபரப்பாக பேசி வருகிறார்கள். ரசிகர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் தங்களின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், இந்திய ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து இங்குப் பார்க்கலாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஃபார்மில் இருந்த ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராகவும், இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஐ.சி.சி போட்டிகளில் ரோகித் இந்தியாவை ஒருநாள் உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி மற்றும் டி20 உலகக் கோப்பை 2024 பட்டம் வெல்ல அணியை வழிநடத்தினார்.
சுப்மான் கில் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்றும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், பேக்-அப் ஓப்பனராக அணியில் தேர்வு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி வழக்கம்போல் நம்பர் 3 பேட்டராக இருப்பார். ஒருநாள் போட்டிகளில் 14000 ரன்களை எட்ட அவருக்கு 94 ரன்கள் தேவை. இந்த சாதனையை அவர் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அடைவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
மும்பை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் உள்நாட்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஃபார்மில் உள்ளார். 2023 ஒருநாள் உலகக் கோப்பையிலும் அவர் சிறப்பாக இருந்தார். மேலும், நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் அரையிறுதி வெற்றியில் அவர் சதம் அடித்து அசத்தி இருந்தார்.
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் இல்லாத நிலையில், கே.எல்.ராகுல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தார். தற்போது அவர் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சனை விட ராகுல் நம்பர் 1 கீப்பராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறந்த ஃபார்மில் இருந்தார். ஹர்திக் தனது உடற்தகுதியை மீட்டெடுத்துள்ளார், மேலும் ஆல்-ரவுண்டரில் நம்பர் 1 தேர்வாக அவர் இருப்பார்.
குஜராத் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் சமீபத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் வாய்ப்பு பெறலாம்.
சைனாமேன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மீண்டும் உடல்தகுதி பெற்று வலைப் பயிற்சிகளில் பந்து வீசத் தொடங்கியுள்ளார். வருண் சக்ரவர்த்தியை விட குல்தீப் ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னராக முதலில் தேர்வு செய்யப்படலாம்.
பெங்கால் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார். அவர் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளுடன் உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவில் 600 ஓவர்களுக்கு மேல் பந்துவீசி அதிக பணிச்சுமை கொண்டுள்ளார். ஆனால் 2023 ஆசியக் கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இரண்டு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால், சிராஜ் ஒருநாள் கிரிக்கெட்டில் உண்மையான மேட்ச்-வின்னராக உள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் ஆடிய டெஸ்டில் முதுகு பிடிப்பு வலியால் அவதியுற்று வருகிறார். அவர் மீண்டு உடல் தகுதியுடன் இருந்தால், 11-வது வீரராகவும் மற்றும் துணைக் கேப்டனாகவும் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.