புதைபடிம எரிபொருள் நிறுவனங்களுக்கு $102 பில்லியன் அபராதம் விதித்துள்ள நியூயார்க் மாநில அரசாங்கம்
அமெரிக்காவின் நியூயார்க் மாநில அரசாங்கம், பருவநிலைக்குச் சேதம் விளைவித்த புதைபடிம எரிபொருள் நிறுவனங்களுக்கு அடுத்த 25 ஆண்டுகளில் 75 பில்லியன் அமெரிக்க டொலர் (S$102 பில்லியன்) அபராதம் விதிக்கவிருக்கிறது.ஆளுநர் கேத்தி ஹோசுல் டிசம்பர் 26ஆம் திகதி இது தொடர்பான மசோதாவிற்கு ஒப்புதல் கையொப்பமிட்டதைத் தொடர்ந்து அது சட்ட அங்கீகாரம் பெற்றது.
பருவநிலை மாற்றம் தொடர்பான மீட்புச் செலவுகளில் ஒரு பகுதியை, சம்பந்தப்பட்ட எண்ணெய், எரிவாயு, நிலக்கரி நிறுவனங்களிடம் வசூலிப்பது இச்சட்டத்தின் நோக்கம்.இதன் மூலம் கிடைக்கும் தொகை, பருவநிலை மாற்றத் தணிப்பு நடவடிக்கைகளுக்குச் செலவிடப்படும். சாலை, போக்குவரத்து, தண்ணீர், கழிவுநீர் போன்றவற்றுக்கான கட்டமைப்புகள், கட்டடங்கள், உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கு அந்தத் தொகை செலவிடப்படும்.
“நியூயார்க் ஓர் எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளது. உலகம் முழுவதும் இது ஒலிக்கும். பருவநிலை நெருக்கடிக்குக் காரணமான நிறுவனங்கள் அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்,” என்று நியூயார்க் செனட்டர் லிஸ் குரூகர் கூறினார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவர் அந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
புதைபடிம எரிபொருள் நிறுவனங்கள் 2000ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை வெளியிட்ட சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் அளவின் அடிப்படையில் அவற்றுக்கு அபராதம் விதிக்கப்படும்.
2028ஆம் ஆண்டு தொடங்கப்படும் பருவநிலை மாசுத் துப்புரவு நிதியில் (Climate Superfund) சேர்க்கப்படும்.
எந்தெந்த நிறுவனங்கள் ஒரு பில்லியன் டன்னுக்கும் அதிகமான, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று நியூயார்க் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை வரையறுக்கிறதோ அவை அனைத்திற்கும் இது பொருந்தும்.அமெரிக்காவில் பருவநிலைச் சட்டத்தை அமல்படுத்தியுள்ள இரண்டாவது மாநிலம் நியூயார்க் ஆகும். முன்னதாக வெர்மோண்ட் மாநிலம் இதேபோன்ற சட்டத்தை அமல்படுத்தியது.
அமெரிக்க மாநிலங்களிலும் தேசிய அளவிலும் தற்போது நடப்பிலிருக்கும் மாசுத் துப்புரவு நிதிகள் தொடர்பான சட்டங்களின்கீழ், ஆபத்தான கழிவுகளை அகற்றுவதற்கான செலவை மாசு ஏற்படுத்தியவர்களே ஏற்கவேண்டியது கட்டாயம். அதே அடிப்படையில் பருவநிலை மாசுத் துப்புரவு நிதி அமைக்கப்பட்டுள்ளது.
சேதத்தைப் பழுதுபார்த்தல், பருவநிலை மாற்றத்தால் விளையும் தீவிர வானிலை நிலவரத்திற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை தொடர்பில் 2050ஆம் ஆண்டுக்குள் நியூயார்க் மாநிலம் 500 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடவேண்டியிருக்கும் என்று குரூகர் குறிப்பிட்டார்.
பெரிய எண்ணெய் நிறுவனங்கள், 2021ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலருக்குமேல் லாபம் ஈட்டியுள்ளன. அவை கிட்டத்தட்ட 1970ஆம் ஆண்டிலிருந்தே, புதைபடிம எரிபொருளைப் பிரித்தெடுத்தல், எரித்தல் போன்ற நடவடிக்கைகளால் பருவநிலை மாற்றம் ஏற்படுவதைக் குறைந்தது 1970ஆம் ஆண்டிலிருந்தே அவை அறிந்துள்ளன என்றார் அவர்.
எரிசக்தி நிறுவனங்கள், புதிய சட்டத்துக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.