போரின் மாறா வடு! இந்தியாவில் இருந்து குடியுரிமை கோரும் இலங்கை அகதி (வீடியோ)
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் குடியுரிமை அங்கீகாரம் அல்லது நாடு திரும்புவதற்காக போராடும் அவல நிலையை இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய ஊடகங்கள் அண்மையில் பகிர்ந்த காணொளியில், சாதாரண வாழ்க்கை நடத்துவதற்கு உரிய அடையாள ஆவணங்கள் வழங்கப்படாததால், தனது பெற்றோர் வசிக்கும் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரி இராமநாதபுரம் மாவட்டச் செயலகத்தின் முன் இளைஞர் மண்டியிட்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டச் செயலக அதிகாரி தன்னை இலங்கைக்கு அனுப்ப மறுப்பதாகவும், தன்னை இந்தியக் குடிமகனாக அங்கீகரித்து எந்த ஆவணமும் வழங்கவில்லை என்றும் அந்த இளைஞர் காவல்துறை அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்ததை வீடியோ காட்டுகிறது.
தாம் 10க்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்டச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன், கடந்த 22 வருடங்களாக இந்தப் பிரச்சினைக்கு எதிராகப் போராடி வருவதாகத் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ”பல வருட போராட்டத்திற்குப் பிறகு, போரின் விளைவுகளால் இனி எந்த ஒரு இளைஞர் வாழ்க்கையும் எதிர்காலம் மறுக்கப்படக்கூடாது. தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்துள்ளார்.