சிரியாவில் முக்கிய நகரமான ஹாமாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!
சிரிய கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை ஹமா நகரத்தை கைப்பற்றினர்,
அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஹமா நகருக்குள் கிளர்ச்சிப் படைகள் நுழைந்து, ராணுவத்தின் பாதுகாப்பு அரணை உடைத்து முன்னேறினர்.
நகருக்குள் நுழைந்துவிட்டதாக கிளர்ச்சிப் படைகள் அறிவித்ததையடுத்து, ஹமா நகரில் இருந்த ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். அவர்கள் பின்வாங்கி ஹமா நகருக்கு வெளியில் உள்ள மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பல நாட்கள் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து போரிட்டதில் பல வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் நகரின் பாதுகாப்புகளை உடைக்க தற்கொலை தாக்குதல்களை நம்பி உள்ளனர் என்றும் ராணுவம் கூறியது.
நான்காவது பெரிய நகரமான ஹமாவை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றியது அதிபர் பஷார் ஆசாத்துக்கு மேலும் பின்னடைவாக இருக்கும்.
அடுத்து கிளர்ச்சிப் படைகள் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸ் நகரை கைப்பற்றுவதற்காக முன்னேறலாம். இந்த நகரம் ஹமாவிலிருந்து தெற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இவ்வாறு கிளர்ச்சிப் படைகளின் கை ஓங்கி வரும் நிலையில், சிரியாவுக்கு ஆதரவாக ரஷியா களமிறங்கி உள்ளது. கிளர்ச்சி படைகளை குறிவைத்து வான் தாக்குதலை நடத்தி முக்கிய கட்டமைப்புகளை தகர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.