பங்ளாதேஷில் பலத்த பாதுகாப்பு, போராட்டங்களுக்கு இடையே வழக்கறிஞர் கொலைக்காக 6 பேர் கைது
பங்ளாதேஷின் சிட்டகோங் நகரில் புதன்கிழமை (26), பலத்த பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்து சமயத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து அங்கு மோதல் சம்பவங்கள் ஏற்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டதன் தொடர்பில் ஆறு பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. 35 வயதாகும் அந்த வழக்கறிஞரின் பெயர் சைஃபுல் இஸ்லாம் அலிஃப் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கிருஷ்ண தாஸ், இஸ்க்கான் எனப்படும் கிருஷ்ண பக்தர்களுக்கான அனைத்துலகச் சங்கத்தைச் (ISKCON) சேர்ந்தவர்.கடந்த திங்கட்கிழமை, டாக்கா விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டாக்காவிலும் சிட்டகோங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அவரது ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே, சிட்டகோங் நீதிமன்றத்திற்கு அருகே முஸ்லிம் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் காவல்துறை கூறியது.இச்சம்பவத்தின் காணொளிப் பதிவு மூலம் சந்தேகத்துக்குரிய ஆறு பேரும் அடையாளம் காணப்பட்டதாக இடைக்கால அரசாங்கத்தின் செய்தித் தொடர்பு அலுவலகம் கூறியது.
பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியது, காவல்துறை அதிகாரிகளைக் காயப்படுத்தியது ஆகியவை தொடர்பில் மேலும் 21 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் ஆறு பேர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடம் நாட்டு வெடிபொருள்கள் காணப்பட்டதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.
ஹசினா கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் தப்பியோடியதை அடுத்து பங்ளாதேஷில் இடைக்கால அரசாங்கம் அமைந்துள்ளது.
கிருஷ்ண தாஸ் கடந்த அக்டோபரில் நடந்த பேரணியில் பங்ளாதேஷின் தேசியக் கொடியை அவமதித்ததாகக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்க மறுத்துவிட்டது.
தாஸ் கைது செய்யப்பட்டதற்கு இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பங்ளாதேஷில் இந்துக்களும் இதர சிறுபான்மையினரும் தாக்குதலுக்கு ஆளாவது குறித்துக் கவலை தெரிவித்ததுடன் வன்முறைக்குக் காரணமானோர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கும்படி அது வலியுறுத்தியது.அதற்குப் பதிலளித்த பங்ளாதேஷ் வெளியுறவு அமைச்சு, நீதித் துறையின் பணியில் அரசாங்கம் தலையிடுவதில்லை என்றும் நீதிமன்றம் இந்த விவகாரத்தைக் கையாள்கிறது என்றும் கூறியுள்ளது.