இலங்கையில் மின் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல் – ஏமாற்றத்தில் மக்கள்
இலங்கையில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதமே இந்த நிலைமைக்கு காரணம் என ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.
மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அப்போது முன்வைத்த மின்சாரக் கட்டணக் குறைப்பு போதாது என்பதால் மீண்டும் முன்மொழிவுகளை மீள்திருத்தம் செய்து சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்திருந்தது.
நவம்பர் 8 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்திருந்த போதிலும், மின்சார சபை அன்றைய தினம் முன்மொழிவை சமர்ப்பிக்கவில்லை, ஆனால் நவம்பர் 22 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறு மின்சார சபை கோரியிருந்தது.
ஆனால் அன்றைய தினம் இலங்கை மின்சார சபை முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவில்லை எனவும், அதற்கு மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை இலங்கை மின்சார சபைக்கு கால அவகாசம் வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறித்த திகதியில் இலங்கை மின்சார சபை முன்மொழிவுகளை சமர்ப்பித்தாலும், முன்மொழிவுகளை ஆராய்ந்து மின்சார கட்டணங்களை திருத்துவதற்கு 6 முதல் 8 வாரங்களுக்கு இடைப்பட்ட கால அவகாசம் தேவைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே, இந்த ஆண்டு மின் கட்டண திருத்தம் அடுத்த வருடம் வரை ஒத்திவைக்கப்படுவதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.