இலங்கை – வவுனியாவில் ரிஷாட், மஸ்தான் ஆதரவாளர்கள் இடையே மோதல்
வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் காதர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கு இடையில் நேற்று (11) இரவு ஏற்பட்ட மோதலில் மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு ஆதரவாக வந்த வாகனங்கள் உட்பட மூன்று வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. பதியுதீனின் வாகனம் உள்ளே இருந்த போது கணிசமான சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வவுனியா, பட்டானியச்சுப்புளியங்குளத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு ஆதரவாக ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வந்த பதியுதீனின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்தியதுடன் தாக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
எதிர்ப்பை எதிர்கொண்ட பதியுதீனின் ஆதரவாளர்கள் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். எவ்வாறாயினும், பதியுதீனின் குழுவினர் வாகனங்களில் திரும்பியபோது, மஸ்தானின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து அவர்களை தாக்கினர்.
வவுனியா பொலிசார் தலையிட்டு நிலைமையை தணித்து, திட்டமிட்டபடி மஸ்தானின் கூட்டத்தை நடத்த அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.