பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானுக்குக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது
இந்தித் திரையுலக நட்சத்திரம் ஷாருக்கானுக்குக் கடந்த வாரம் கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறை கைதுசெய்துள்ளது.
முகம்மது ஃபைஸன் கான் என்ற அந்த வழக்கறிஞர், சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரிலுள்ள தம் வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) கைதுசெய்யப்பட்டார்.நடிகர் ஷாருக்கான் ரூ.50 லட்சம் தரவில்லை எனில் அவரைக் கொலை செய்யப்போவதாக ஃபைஸன் மிரட்டல் விடுத்திருந்தார்.
மும்பைக் காவல்துறைக்குமுன் முன்னிலையாகி விளக்கம் அளிக்காததை அடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மிரட்டல் விடுக்கப் பயன்படுத்தப்பட்ட தமது கைப்பேசி முன்னரே தொலைந்துபோய்விட்டதாக ஃபைஸன் தெரிவித்திருந்தார். மேலும், அதன் தொடர்பில் நவம்பர் 2ஆம் திகதியே தாம் காவல்துறையில் புகாரளித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
ஃபைஸன் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவர்மீது காவல்துறை கொலை மிரட்டல் வழக்கு பதிந்துள்ளது.கொலை மிரட்டலை அடுத்து ஷாருக்கானுக்கு மும்பைக் காவல்துறை ‘ஒய்+’ பாதுகாப்பு அளித்து வருகிறது. ஆயுதமேந்திய அறுவர் 24 மணி நேரமும் அவருக்குப் பாதுகாப்பு அளித்துவருகின்றனர்.
முன்னதாக, இன்னொரு பாலிவுட் நட்சத்திரம் சல்மான்கானுக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்கள் வந்தன. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து அம்மிரட்டல்கள் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
அரியவகை ‘பிளாக் டீர்’ மானைக் கொன்றதற்காக கோவிலுக்குச் சென்று சல்மான் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி தரவேண்டும் என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் தரப்பிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அவ்வகை மானை பிஷ்னோய் இனத்தவர் புனிதமாகக் கருதுகின்றனர்.இதற்கிடையே, சல்மானுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேந்த 32 வயது நபர் ஒருவர், சென்ற வாரம் கர்நாடக மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டார்.