வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாகும் சூசி வைல்ஸ்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டோனல்ட் டிரம்ப், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக சுசீ வைல்ஸ் என்பவரை நியமித்துள்ளார். அதற்கான அறிவிப்பை அவர் வியாழக்கிழமை (நவம்பர் 7) வெளியிட்டார்.
2025 ஜனவரி 20ஆம் த்திகதி அதிபர் பொறுப்பை ஏற்க இருக்கும் டிரம்ப், அறிவித்திருக்கும் முதல் நியமனம் இது. அத்துடன், அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு இருக்கும் முதல் பெண்மணி வைல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.தலைமை அதிகாரியாக அறிவிக்கப்பட்டு இருக்கும் வைல்ஸ், டிரம்பின் பிரசார நிர்வாகிகளில் ஒருவராகத் திறம்பட செயல்பட்டவர்.
வெள்ளை மாறிகை தலைமை அதிகாரி என்னும் பொறுப்பு செல்வாக்குமிக்கது. அவரைத் தாண்டிதான் அதிபரைச் சந்திக்க முடியும்.மேலும், அதிபரின் நிகழ்ச்சிகளை அவர்தான் தொகுக்க வேண்டும். இதர அரசாங்கத் துறைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளும் பொறுப்பும் அவரைச் சார்ந்தது.வெள்ளை மாளிகைப் பணியாளர்களை நிர்வகிப்பதும் அவரே.
அவரது நியமனம் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்க வரலாற்றில் இடம்பெற்றுள்ள மாபெரும் அரசியல் வெற்றியை அறுவடை செய்ய சுசீ வைல்ஸ் உதவி புரிந்தார்
“மேலும், 2016 மற்றும் 2020 தேர்தல் பிரசாரங்களை வெற்றிகரமாக நிகழ்த்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அனைத்துலக அளவில் மதிக்கப்படும், புகழப்படும் சுசீ திறமையானவர், புத்தாக்கம் மிக்கவர், கடினமாக உழைக்கக்கூடியவர்.“நமது நாட்டிற்கு அவர் பெருமை தேடித் தருவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்றும் திரு டிரம்ப் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.அந்த அறிக்கை வெளியான பின்னர், வெள்ளை மாளிகையில் டிரம்ப்புக்கு திடமான, புத்திகூர்மையான ஆலோசனைகளை வைல்ஸ் வழங்குவார் என்று பலரும் கருத்துரைத்தனர்.