டிரம்பை வாழ்த்தி, அமெரிக்காவின் விருப்பத்தை மதிப்பதாகக் கூறியுள்ள சீனா
அமெரிக்கத் தேர்தல் முடிவுகளை மதிப்பதாகக் கூறிய சீனா, டோனல்ட் டிரம்ப்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
சீனாவும் அமெரிக்காவும் அவற்றின் வேறுபாடுகளைத் தகுந்த முறையில் கையாள, சீன – அமெரிக்க உறவுகளுக்கு நடைமுறைக்கேற்ற அணுகுமுறை வேண்டும் என்று அரசாங்கக் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘சைனா டெய்லி’ நாளிதழ் கேட்டுக்கொண்டுள்ளது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப், கடுமையான வரிகளை நடைமுறைப்படுத்த உறுதியளித்துள்ளார். நவம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிசை அவர் பெரிய அளவில் வெற்றிகண்டார்.
வழங்கப்படும் வாய்ப்பு வீண்போகாமல் இருந்தால், டிரம்ப் இரண்டாம் முறையாக அதிபராகியிருப்பது, சீன – அமெரிக்க உறவுகளில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கலாம் என்று ‘சைனா டெய்லி’ நாளிதழ் கூறியது.
அடுத்த அமெரிக்க நிர்வாகம், வேறுபாடுகளைக் கையாள சீனாவுடனான கலந்துரையாடல்களையும் தொடர்பையும் வலுப்படுத்தலாம் என்று அது குறிப்பிட்டது.
சீனா தொடர்பான அமெரிக்கக் கொள்கைகளும் தவறான எண்ணங்களும் இருதரப்பு உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக நாளிதழ் கூறியது.
“உலகச் சவால்களின் சிக்கல்களைக் கையாள, இருதரப்பு உறவுகளுக்கு நடைமுறைக்கேற்ற அணுகுமுறை மிக முக்கியம்,” என்றும் அது தெரிவித்தது.