ஸ்பெயின் கனமழை – வெள்ளம்: 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு , திணறும் மீட்புக் குழுவினர்
ஸ்பெயின் நாட்டில் கனமழை – வெள்ளப்பெருக்கு காரணமாக 205 பேர் உயிரிழந்தனர். கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் மழை வெள்ளத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தங்கள் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். அந்த அளவுக்கு வரலாறு காணாத மழை சேதம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளனவா என தேடும் அவலநிலை அங்கு நிலவுகிறது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கைப் பேரிடர் பாதிப்புகளில் இது ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை பின்னிரவு மற்றும் புதன்கிழமை அன்று ஸ்பெயினில் கனமழை பொழிந்தது. முன்னதாக, அந்த நாட்டின் உயல்வா கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு வானிலை மையம் சார்பில் கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அன்று அங்கு பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 205 பேர் உயிரிழந்தனர். வலேன்சியாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் எண்ணில் அடங்கா மக்கள் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கிழக்கு வலேன்சியாவின் வீதிகளில் சாய்ந்த மின் கம்பங்கள், வேரோடு சாய்ந்த மரங்கள், சேரும் சகதியுமான வீதிகள் மற்றும் வீடுகள், ஒன்றான மீது ஒன்றாக நிற்கும் கார்கள் என்ற சூழல் நிலவுகிறது. அங்கு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான மின்சாரம், உணவு போன்ற அடிப்படை தேவைகளும் முறையாக கிடைக்கப்பெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சுமார் 40,000 மக்கள் மின்சார வசதி இல்லாமல் உள்ளனர் என்ற நிகழ் நேர தகவல் அங்கிருந்து கிடைத்துள்ளது. கடந்த அக்.18 மற்றும் 31 ஆகிய திகதிகளில் எடுக்கப்பட்ட சாட்டிலைட் மேப்பின் படங்கள் வெள்ளம் ஏற்படுத்தியுள்ள சேதத்தை அப்படியே தெளிவாக விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
வலேன்சியா அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டின் அவசரகால அலர்ட் சிஸ்டம் குறித்த கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை இதற்கு காரணமாக விஞ்ஞானிகள் சொல்லி வருகின்றனர். பலர் மாயமாகி உள்ள காரணத்தால் உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அரசு அதிகாரிகள் வசம் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களைக் கண்டறிவதே எங்களது முதல் பணி. அதன் மூலம் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு நாங்கள் உதவ முடியும் என நம்புகிறோம் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மழை எச்சரிக்கைக்கு மத்தியில் மீட்பு படையினரும் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். இயந்திரங்களை கொண்டும் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





