இஸ்ரேல் – லெபனான் எல்லைப் பகுதியில் ஏவுகணை தாக்குதலில் நான்கு தாய்லாந்து பிரஜைகள் உயிரிழப்பு!
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லைப் பகுதிக்குப் பக்கத்தில் உள்ள ‘மெட்டுலா’ எனும் நகருக்கு அருகில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், தாய்லாந்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டனர்.
அதோடு, ஒருவர் காயமடைந்ததாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மரிஸ் சங்கியாம்பொங்சா ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு இஸ்ரேலிய எல்லைப் பகுதிகளில் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியபோது உயிரிழந்த 1,200 பேரில், தாய்லாந்தைச் சேர்ந்த 41 பேரும் அடங்குவர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி 30 தாய்லாந்து நாட்டவர் கடத்தப்பட்டனர். ஆறு பேர் இன்னும் பிணையில் இருப்பதாக நம்பப்படுவதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் – காஸா போருக்கு முன்னர், இஸ்ரேலில் கிட்டத்தட்ட 30,000 தாய்லாந்து நாட்டவர் பணிபுரிந்துகொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் வேளாண்மைத் துறையில் இருந்தனர்.
“இந்த நீடித்த சண்டையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களைக் கருதி, அனைத்துத் தரப்பினரும் அமைதிப் பாதைக்குத் திரும்பவேண்டும் என்று தாய்லாந்து தொடர்ந்து வலுவாகக் கேட்டுக்கொள்கிறது,” என்று மரிஸ் கூறினார்