அமெரிக்காவிடம் இருந்து 1,000 ட்ரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தைவான்
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய 1,000 வானூர்திகளை அமெரிக்காவில் இருந்து வாங்குவதற்கான சம்பிரதாய ஒப்பந்தங்களில் தைவான் பாதுகாப்பு அமைச்சு கையெழுத்திட்டு உள்ளது.
‘ஏரோவிரான்மண்ட்’ (AeroVironment) ‘ஏண்டுரில் இண்டஸ்ட்ரீஸ்’ (Anduril Industries) ஆகிய அமெரிக்கக் குத்தகையாளர்களிடம் இருந்து வாங்கப்படுவதற்கான ஒப்பந்தங்கள் அவை.
தன் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்த்து சமாளிக்க அந்த வானூர்திகளை தைவான் வாங்குவதாக அந்தப் பரிவர்த்தனை தொடர்பான துறையில் உள்ளோர் தெரிவித்துள்ளனர்.முன்னதாக, செப்டம்பர் மாத பிற்பாதியில் ஏற்புக் கடிதம் ஒன்றில் தைவான் கையெழுத்திட்டது.
வானூர்திகளின் தரம், விலை மதிப்பு மற்றும் விநியோக திகதிகள் குத்தகைப் பத்திரங்களில் விவரிக்கப்பட்டு உள்ளன. அந்தப் பத்திரங்களில் தைவான் விரைவில் கையெழுத்திடும் என்று பெயர் குறிப்பிட விரும்பாதவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க வானூர்திகளை தைவான் வாங்குவது தொடர்பாக எந்த ஓர் அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.மேலும், அமெரிக்கத் தற்காப்புத் துறையின் பேச்சாளரும் அந்தக் கொள்முதல் குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். வாஷிங்டனில் உள்ள தைவான் அலுவலகப் பிரதிநிதிகளும் அதுபற்றி வாய்திறக்கவில்லை.