இலங்கை: மின் கட்டணம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது நிர்வாகத்தின் கீழ் அடுத்த மூன்று வருடங்களுக்குள் முழு நாடும் டிஜிட்டல் மாற்றத்திற்கு உட்படும் என அறிவித்துள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கல் இலங்கையின் உலகளாவிய நிலைப்பாட்டை உயர்த்துவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்ததோடு, அரசாங்கம் ஏற்கனவே அது தொடர்பான முன்முயற்சிகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதையும் உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதி செயலகத்தில் வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளுடன் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேம்பர் உறுப்பினர்கள் தன்னார்வ அடிப்படையில், இழப்பீடு இல்லாமல் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளுக்கு தங்கள் ஆதரவை உறுதியளித்தனர்.
காப்பீடு, வங்கி, கட்டுமானம், சுற்றுலா, பெருந்தோட்டக் கைத்தொழில்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறைகளில் உள்ள சவால்கள் மற்றும் எதிர்கால நோக்கங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், மக்கள் நலனுக்காக வரிச்சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைகள் தொடர்பான முடிவுகளில் ஆற்றல் சுயாட்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வரவிருக்கும் மின்சாரச் சட்டம் ஆற்றல் சுயாட்சியை ஒரு அடிப்படை இலக்காக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்தும் வகையில் மின்சார சபைக்குள் வினைத்திறன் இன்மை மற்றும் ஊழியர் முகாமைத்துவத்தை நிவர்த்தி செய்யும் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் சில வருடங்களில் மின்சார கட்டணத்தை கணிசமான அளவில் குறைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.